Thomas Cup 2022 Tamil News: தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டிகள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விளையாடிய இந்திய ஆடவர் அணி 12ம் தேதி நடந்த கால்இறுதி ஆட்டத்தில் 3-2 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 43 ஆண்டுகளுக்கு பிறகு அரை இறுதிக்குள் நுழைந்தது. இதனை தொடர்ந்து 13ம் தேதி நடந்த அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 3-2 என்ற புள்ளி கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்த நிலையில், தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் ஆடவர் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 14 முறை சாம்பியனான இந்தோனேசிய அணியை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற போட்டிகளில் இந்திய வீரர் லக்சயா சென் முதல் போட்டியில் 8-21, 21-17, 21-16 என்ற புள்ளி கணக்கில் அந்தோணி கின்திங்கை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதனால், இறுதி போட்டியில் 1-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது சுற்றில் இந்திய இணை சாத்விக் – சிராக் இணை வெற்றி பெற்றனர். 3-வது போட்டியில் இந்திய அணியின் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தாமஸ் கோப்பையை வென்றது.
தாமஸ் கோப்பையின் 73 ஆண்டுகால வரலாற்றில் இந்திய அணி முதன் முறையாக பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. 14 முறை சாம்பியனான இந்தோனேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி முதல் முறையாக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் கோப்பையை வென்ற இந்திய ஆடவர் அணிக்கு இந்திய விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில், இந்திய அணிக்கு அசத்தல் வெற்றிக்கு நடிகை டாப்ஸி பன்னு ட்விட்டரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பின்னர், அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு படத்தைப் பகிர்ந்து இருந்தார். அதில், இந்தியாவின் பேட்மிண்டன் இணை அணி (இரட்டையர்) பயிற்சியாளர் மத்தியாஸ் போ வீரர்களைக் கட்டிப்பிடிப்பதைக் காண முடிந்தது. மேலும் அந்த பதிவில் டாப்ஸி, “மிஸ்டர் பயிற்சியாளர், நீங்கள் நம்மை பெருமைப்படுத்தியுள்ளீர்கள்.” என்று பதிவிட்டு இருந்தார்.

பயிற்சியாளர் மத்தியாஸ் – நடிகை டாப்ஸி ஆகிய இருவரும் டேட்டிங் செய்வதாக அடிக்கடி செய்திகளும், வதந்திகளும் பரவின. இந்த நிலையில் டாப்ஸி மத்தியாஸுக்கு வாழ்த்து கூறியுள்ளது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதற்கிடையில் தனது அணியின் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள மத்தியாஸ், “என்ன ஒரு செயல்திறன், என்ன ஒரு குழு. தாமஸ் கோப்பை தங்கம்.” என்று பெருமிதத்தோடு பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil