Indian women cricket : ஜூனியர் உலககோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி, வங்கதேச அணியிடம் தோற்ற சோகம் இன்னும் மறையாத நிலையில், பெண்கள் கிரிக்கெட் முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில், , ரன் அவுட் தவறியதால், இந்திய அணி வெற்றிக்கனியை தவறவிட்ட சம்பவம், ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உடனான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. லீக் சுற்று போட்டியுடன் இங்கிலாந்து அணி வெளியேற, இறுதிப்போட்டியில், இந்திய - ஆஸ்திரேலிய அணிகள் மோதின.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. மெக் லானிங் சிங்கிள் எடுக்க விரைவாக முயற்சித்தார். மிட் ஆனிலிருந்த ஷிகா பாண்டே விரைவாக பந்தை எடுத்து ஸ்டெம்பை நோக்கி வீசினார். ஆனால் பந்து ஸ்டெம்ப் மைக்கின் ஒயரில் பட்டதால் ரன் அவுட் வாய்ப்பு பறிபோனது.
ஸ்டெம்ப் மைக்கில் பந்து படாமல் மட்டும் இருந்திருந்தால் கட்டாயம் ரன் அவுட்டாகி இருக்கும். ஆஸ்திரேலிய அணிக்கும் அது ஒரு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கி இருக்கும்.
ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 155 ரன்கள் குவித்தது. அந்த அணியின் பெத் மூனி அதிகபட்சமாக 71 ரன்கள் குவித்தார்.
இதை தொடர்ந்து இலக்கை விரட்டிய இந்திய அணியில் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 37 பந்துகளில் 66 ரன்கள் விளாசினார். ஆனால் மற்ற வீராங்கனைகள் சோபிக்காததால் 20 ஓவர்களின் முடிவில் 144 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி. இதன் மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா.
அந்த ரன் அவுட் வாய்ப்பால், இந்த போட்டியின் முடிவில் மாற்றமும் ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உருவாக்கி இருக்கலாம். ஆனால் இந்திய அணியின் துரதிருஷ்டத்தால் அந்த வாய்ப்பு தள்ளிப் போனது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil