India women won Commonwealth games cricket against England: காமன்வெல்த் போட்டிகளில் பெண்கள் கிரிக்கெட்டின் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
காமன்வெல்த் போட்டிகளில் பெண்கள் கிரிக்கெட்டின் அரை இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இந்திய மகளிர் மற்றும் இங்கிலாந்து மகளிர் மோதிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணி : ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர், தனியா பாட்டியா, தீப்தி சர்மா, பூஜா வஸ்ட்ரக்ர், ராதா யாதவ், ஸ்னே ரானா, மேக்னா சிங், ரேணுகா சிங்
இங்கிலாந்து அணி : சோபியா டங்லே, டேனியல் வயாட், ஆலிஸ் கேப்ஸே, நடாலி சேவர், ஏமி ஜோன்ஸ், மயா பவுச்சியர், கேத்ரீன் பர்ண்ட், சோபி எக்லீஸ்டோன், ஃப்ரெயா கெம்ப், இஸ்ஸி வோங், சாரா க்ளென்
இந்திய அணி 164/5
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா களமிறங்கினர். தொடக்கம் முதலே ஸ்மிருதி மந்தனா அடித்து ஆடினார். இந்திய அணி விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இங்கிலாந்து அணி திணறியது. சிறப்பாக ஆடிய மந்தனா அரை சதம் விளாசினார். மறுபுறம் கம்பெனி கொடுத்த ஷபாலி 15 ரன்னில் அவுட் ஆனார். சிறப்பாக ஆடிய ஸ்மிருதி 32 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மந்தனா 3 சிக்சர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் விளாசினார்.
அடுத்து களமிறங்கிய ரோட்ரிக்ஸூம் அதிரடியாக அடித்து ஆடினார். மறுபுறம் ஆடிவந்த கேப்டன் ஹர்மன்பிரித் 20 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய தீப்தி சர்மா 22 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த பூஜா ரன் எதுவும் இன்றி டக் அவுட் ஆனார். இதனையடுத்து இந்திய 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடிய ரோட்ரிக்ஸ் 31 பந்துகளில் 44 ரன்கள் அடித்தார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும். இங்கிலாந்து அணி தரப்பில் ஃப்ரெயா கெம்ப் 2 விக்கெட்களையும், பர்ண்ட் மற்றும் சேவர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இங்கிலாந்து பேட்டிங்
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் டங்லே 19 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் ஆடி வந்த வயாட் அடித்து ஆடி வர, அடுத்து களமிறங்கிய ஆலிஸ் 13 ரன்களில் ரன் அவுட் ஆனார். பின்னர் வயாட் உடன் ஜோடி சேவர் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். அடித்து ஆடி வந்த வயாட் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஏமி ஜோன்ஸ் அடித்து ஆடினார்.
அணியின் எண்ணிக்கை 100 ஐ தாண்டிய நிலையில், ஏமி ஜோன்ஸ் 31 ரன்களில் அவுட் ஆனார். அடுத்ததாக வெற்றிக்காக போராடிய சேவர் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். வெற்றிக்கு கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது. இந்திய அணி சிறப்பாக பந்துவீசி இங்கிலாந்து அணியை 160 ரன்களுக்குள் மடக்கி, 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில், ஸ்னே ரானா 2 விக்கெட்களையும், தீப்தி சர்மா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இதனால் இந்திய அணிக்கு தங்கம் அல்லது வெள்ளி கிடைப்பது உறுதியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil