கண்டுகொள்ளப்படாத ஹாக்கி வெற்றி! சாம்பியன்களை ஏன் கொண்டாட மறந்தோம்?

இந்தாண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் குவாலிஃபயரில் கலந்து கொள்ளவும் இந்திய பெண்கள் ஹாக்கி அணி தேர்வாகி உள்ளது.

By: June 25, 2019, 3:38:26 PM

ஆசைத் தம்பி

விளையாட்டில், நமது நாட்டின் அடிநாதம் கிரிக்கெட் தான் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில், நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் எனும் பெரும் சூறாவாளி, இப்போது தான் சூடு பிடிக்கவே ஆரம்பித்து இருக்கிறது. ஆனால், அதன் பயிற்சிப் போட்டியில் இருந்தே, ஒவ்வொரு போட்டி குறித்து அணு அணுவாக நாம் அலசி வருகிறோம். நித்தம் பேசி வருகிறோம்.

இவ்வளவு ஏன்.. இந்திய அணியாக இருந்தாலும் பேசுகிறோம். ஆப்கன் அணியாக இருந்தாலும் பேசுகிறோம். அலசுகிறோம். எல்லாம் சரி… கிரிக்கெட் தான் இந்தியாவின் மதம் என்பதெல்லாம் சரி. அதற்காக, மற்ற விளையாட்டை நாம் அம்போவென விட்டு வேண்டியது தானா? இங்கு வேறு விளையாட்டுகளே விளையாடப்படவில்லையா? அல்லது மற்ற விளையாட்டுகளில் வேறு எந்த சாதனையும் இங்கு படைக்கப்படவில்லையா?

ஏன் சம்பந்தமேயில்லாமல் பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். சம்பந்தம் இருப்பதால் தான் ஆதங்கத்துடன் பேசுகிறேன்.

பெண்கள் உலக ஹாக்கி தொடரின் சாம்பியன் கோப்பையை இந்திய மகளிர் அணி வென்றிருக்கிறது. இது ஏதோ, போன மாசம் முந்தியோ, ஆறு மாசம் முந்தியோ அல்ல…ஜூன்.23 ஆம் தேதி. நீங்கள் இந்தக் கட்டுரையை படித்திருக்கும் வெகு சில மணி நேரங்களுக்கு முந்தி தான் இச்சாதனை படைக்கப்பட்டிருக்கிறது.

பெண்கள் உலக ஹாக்கி இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஜப்பான் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்திலேயே இந்திய வீராங்கனையும், கேப்டனுமான ராணி ரம்பால் முதல் கோலை பதிவு செய்தார். அதற்கு பதிலாக ஜப்பான 11-வது நிமிடத்தில் கோல் அடித்தது. 45-வது மற்றும் 60-வது நிமிடங்களில் குர்ஜித் கவுர் அடுத்தடுத்து கோல் அடித்தார். இதனால் இந்தியா 3-1 என ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஆனால், சமூக ஊடகங்களில் மறந்தும் கூட, இதுகுறித்த பதிவுகளை அதிகம் நம்மால் பார்க்க முடியவில்லை. கிரிக்கெட்டுக்கு இணையாக விவாதிக்கப்படும் என்று நினைப்பது பேராசை. ஆனால், குறைந்த பட்சம் டிரெண்டிங் ஆனதா என்று பார்த்தால், அது கூட இல்லை என்பதே உச்சக்கட்ட கொடுமை. உலக ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதோடு மட்டுமில்லாமல், இந்தாண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் குவாலிஃபயரில் கலந்து கொள்ளவும் இந்திய பெண்கள் ஹாக்கி அணி தேர்வாகி உள்ளது.

பெண்கள் ஹாக்கி என்பதால் இதை நிச்சயம் பேசவில்லை. கிரிக்கெட்டை போன்று மற்ற விளையாட்டுக்கு நாம் ஏன் இந்த முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை என்ற கேள்வியை முன்வைத்தே இதை பேச நேரிடுகிறது.

கடந்த ஆண்டு, இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி உதிர்த்த வார்த்தைகள் இவை.

“இந்திய கால்பந்தின் மீது கடைசி நம்பிக்கை வைத்துள்ளவர்கள் அல்லது நம்பிக்கையே இல்லாதவர்கள் மைதானத்தில் வந்து எங்களை பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறேன். மைதானத்துக்கு வந்து எங்களை கிண்டல் செய்யுங்கள், விமர்சியுங்கள், உற்சாகப்படுத்துங்கள். ஆனால், எங்களுக்கும் ஆதரவு கொடுங்கள்” என்று நமது இந்திய ரசிகர்களை பார்த்து கெஞ்சியது தான் நம் நினைவுக்கு வருகிறது.

இறுதியாக, கிரிக்கெட்டுக்கு மட்டும் நாம் கொடுத்து வரும் ஆதரவால், வேறு என்னவற்றை இழந்து வருகிறோம் என்பதற்கு ஃபிபா நறுக்கென்று சொன்ன கருத்தைவிட விட வேறொரு சிறந்த உதாரணம் இருக்க முடியாது. “கால்பந்தாட்டத்தில் இந்தியா இன்னமும் ஒரு தூங்கிக் கொண்டிருக்கும் பிரம்மாண்டமாகவே உள்ளது” என்பதே அந்த வார்த்தைகள்.

இது கால்பந்தட்டத்திற்கு மட்டுமல்ல, மற்ற அனைத்து விளையாட்டிற்கும் பொருந்தும். விளையாட்டு எனும் ஏணியில், ஒவ்வொரு படியிலும் நாம் ஏறிச் சென்றால் தான் உச்சிக்கு செல்ல முடியும். கிரிக்கெட் என்ற ஒரு படியில் மட்டும் நின்று கொண்டு எவ்வளவு அழுத்தமாக மிதித்தாலும், நம்மால் அந்த உச்சியை ஒருநாளும் தொடவே முடியாது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:India womens hockey cricket world cup 2019 sports

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X