13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்க உள்ளன.
இந்நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான ஆசிய கோப்பை அணியில் இடம் பெற்றிருந்த வீரர்களில் இருந்து திலக் வர்மா, சஞ்சு சாம்சன், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் நீக்கப்பட்டு மீதமுள்ள வீரர்கள் உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆஃப் ஸ்பின்னர் இல்லை
இந்நிலையில், உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஒரு தரமான ஆஃப் ஸ்பின் வீசும் சுழற்பந்துவீச்சாளர் இல்லை. உலகக் கோப்பை அணியில் சுழற்பந்துவீச்சு வரிசையில் குல்தீப் யாதவ் மட்டுமே ஒரே ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னராக சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி நிர்வாகம் குல்-சா ஜோடியை உடைத்து சைனாமேன் குல்தீப் யாதவை மட்டும் தேர்வு செய்துள்ளனர்.
இதேபோல், ஆஃப்-ஸ்பின்னரான ஆர் அஸ்வினுக்கும் இடம் கிடைக்கவில்லை. அதாவது குல்தீப், ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகிய மூன்று ஸ்பின்-பவுலிங் விருப்பங்களை மட்டுமே இந்தியா கொண்டுள்ளது. இதில், அக்சர் பட்டேலின் தேவை அணியில் இல்லை. ஏனெனில், அவர் ஜடேஜா ஸ்டைலில் அவரைப் போலவே பந்து வீசக்கூடியவர். மற்றும் அவரும் ஒரு ஆல்ரவுண்டர். ஜடேஜா விளையாடாத பட்சத்தில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.
இந்த தொடரில் ஆடும் பெரும்பாலான நாடுகளில் இடதுகை பேட்ஸ்மேன் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், அணியில் ஒரு ஆஃப் ஸ்பின்னர் இல்லாதது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவர் மட்டுமே தற்போதைக்கு இந்தியாவில் பெயர் சொல்லக் கூடிய ஆப் ஸ்பின்னர்களாக உள்ளனர். அக்சர் பட்டேலுக்கு பதிலாக இவர்களில் ஒருவருக்கு 15 பேர் அணியில் இடம் கொடுத்திருக்கலாம். துணைக் கண்ட மைதானங்கள் பொதுவாக சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பபாதல், அதனை கருத்தில் கொண்டும் ஒரு ஆஃப் ஸ்பின்னரை அணியில் சேர்த்திருக்கலாம்.
உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி:-
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (வி.சி), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி , முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“