2023 World Cup - India team Tamil News: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்க உள்ளன.
இந்த தொடருக்கான தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் அக்டோபர் 8 ஆம் தேதி அன்று சந்திக்கிறது. கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் அக்டோபர் 14ம் தேதி சனிக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
சஞ்சு, திலக் வர்மா இல்லை
இந்நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) மூத்த தேசிய தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் இலங்கை சென்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரை சந்தித்து அணியை தேர்வு செய்துள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் ஆசியக் கோப்பை ஆட்டம் முதல் இன்னிங்ஸுக்குப் பிறகு கைவிடப்பட்டதை அடுத்து இந்த சந்திப்பு நடந்தது.
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்த திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா மற்றும் ரிசர்வ் வீரராக உள்ள சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்கவில்லை.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பேட்ஸ்மேன்களாகவும், கே.எல்.ராகுல், இஷான் கிஷன் விக்கெட் கீப்பர்களாகவும், ஹர்த்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் ஆல் ரவுண்டர்களாகவும், குல்தீப் யாதவ் சுழற்பந்து வீச்சாளராகவும், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாகவும் இடம் பிடித்துள்ளனர்.
தேர்வுக் குழு ராகுலின் உடற்தகுதி குறித்து ஆலோசித்த நிலையில், மருத்துவக் குழு கிரீன் சிக்னல் கொடுத்ததை அடுத்து, அவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் ராகுல் பல மணி நேரம் பேட்டிங் செய்துள்ளார். ஆசியக் கோப்பையில் இந்திய அணியில் இணைவதற்காக அவர் இலங்கை செல்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐசிசி) உலகக் கோப்பை இறுதி அணியை சமர்ப்பிக்க செப்டம்பர் 5 ஆம் தேதி வரை காலக்கெடு வைத்டுள்ளது. அதனால், பி.சி.சி.ஐ, செப்டம்பர் 4 ஆம் தேதி மாலை தனது தேர்வுக் குழு கூட்டத்தை நடத்த விரும்பியது. ஆனால் மருத்துவக் குழு ராகுலை அனுமதித்த பிறகு, ஒரு நாள் காத்திருப்பதில் அர்த்தமில்லை என்று அவர்கள் உணர்ந்ததாக தெரியவந்துள்ளது.
இறுதி செய்யப்பட்ட இந்திய உலகக் கோப்பை அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்த்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம்ஆப்பில் பெற https://t.me/ietamil“