ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் 3 டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (எம்.சி.ஜி) கடந்த வியாழக்கிழமை (டிச.26) முதல் பாக்சிங் டே போட்டியாக நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 369 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 2வது இன்னிங்சில் ஆடிய ஆஸ்திரேலியா 234 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 340 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணியில் 155 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், இந்தியாவை 184 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி - இந்தியா எப்படி தகுதி பெறலாம்?
இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்தியா சிறப்பான வெற்றியை பதிவு செய்ய வேண்டியது அவசியமாக இருந்தது. ஆனால், இந்திய அணி தொடரில் ஒரு போட்டியில் வெற்றி, ஒரு போட்டியில் டிரா, 2 போட்டியில் தோல்வி என பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஏற்கனவே தென் ஆப்ரிக்க அணி தகுதி பெற்றுள்ளது. மீதமுள்ள ஒரு இடத்துக்கு ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நடக்கிறது. இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் வெற்றியை ருசித்துள்ள ஆஸ்திரேலியா கூடுதல் புள்ளிகள் பெற்ற நிலையில் 2-வது இடத்தில் நீடிக்கிறது. தோல்வியடைந்த இந்தியா சில புள்ளிகளை இழந்து 3-வது இடத்தில் தொடருகிறது.
சிட்னியில் வருகிற ஜனவரி 3 ஆம் தேதி முதல் தொடங்கி நடக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் பட்சத்தில், அந்த அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடும். மேலும், ஆஸ்திரேலியாவின் வெற்றி சதவீதம் 57 ஆக இருக்கும்.
ஒருவேளை போட்டி டிரா ஆகும் பட்சத்தில், இலங்கைக்கு எதிராக ஆஸ்திரேலியா ஆடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியை அவர்கள் டிரா செய்ய வேண்டும். அப்படி நடக்காமல், 2 போட்டியையும் இலங்கை அணி வென்றுவிட்டால், இலங்கையின் வெற்றி சதவீதம் 53.85 ஆக இருக்கும். அவர்களால் ஆஸ்திரேலியாவின் வெற்றி சதவீதத்தை முந்தவும் முடியும்.
ஆஸ்திரேலியா எதிரான கடைசி போட்டியில் இந்தியா வெற்றி பெற்று விட்டால், அவர்களின் வெற்றி சதவீதமாக 55.26 ஆக இருக்கும். இந்தியாவை முந்த ஆஸ்திரேலியா இலங்கை அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டியில் ஒரு டெஸ்ட் போட்டியில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும்.
இந்தியாவைப் பொறுத்தவரை, 60 வெற்றி சதவீதம் பெறவிருக்கும் 2 அணிகளுடன் போட்டியில் இருக்கிறது. அதனால், சிட்னியில் நடக்கும் போட்டியை வென்று வெற்றி சதவீதம் 55.26 என்பதை அடைய வேண்டும். அதன்பிறகு அவர்கள் இலங்கை அணிக்கு எதிராக தொடரில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுவிடக்கூடாது என நினைக்க வேண்டும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா 2-2 என்கிற கணக்கில் முடித்தால் மற்றும் இலங்கைக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் தொடர் டிராவில் முடிந்தால், இந்த இரண்டு அணிகளின் வெற்றி சதவீதமாக 55.26 என இருக்கும். அப்படி நடக்கும் பட்சத்தில், அதிக தொடர்களை வென்றதன் மூலம் இந்தியா தகுதி பெறும் ஆஸ்திரேலியாவின் இரண்டுடன் ஒப்பிடும்போது, இந்தியா மூன்று தொடர்களை வென்றுள்ளது.
இலங்கைக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலியா 2 போட்டியையும் டிரா செய்து 8 புள்ளிகளை பெற்றால், அவர்கள் இந்தியாவை முந்தும் வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் தோல்வி அல்லது டிரா செய்யும் பட்சத்தில் இந்தியாவின் வாய்ப்பு முற்றிலும் குறைந்து அவர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை இழக்க நேரிடும்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் பின்வருமாறு:-
1. தென் ஆப்பிரிக்கா - 66. 67 சதவீதம்
2. ஆஸ்திரேலியா - 61.46 சதவீதம்
3. இந்தியா - 52.78 சதவீதம்
4. நியூசிலாந்து - 48.21 சதவீதம்
5. இலங்கை - 45.45 சதவீதம்
6. இங்கிலாந்து - 43.18 சதவீதம்
7. வங்காளதேசம் - 31.25 சதவீதம்
8. பாகிஸ்தான் - 30.30 சதவீதம்
9. வெஸ்ட் இண்டீஸ் - 24.24 சதவீதம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.