Jeswin Aldrin Tamil News: இந்திய தடகளத்தில் தமிழக வீரர்கள் தனிமுத்திரையை பதித்து வருகிறார்கள். அந்த வகையில், நீளம் தாண்டுதலில் தேசிய அளவில் சாதனை படைத்தது, அதை அவரே முறியடித்து இருக்கிறார் இளம் வீரரான ஜெஸ்வின் ஆல்ட்ரின் (20). தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு அமைதியான கிராமமான முதலூரில் பிறந்த இவர், சிறுவயது முதலே விளையாட்டில் ஆர்வமாக கலந்து கொண்டார். இவர் வகுப்பறையில் இருந்ததை விட மைதானத்தில் தான் அதிகமாக காணப்படுவாராம்.
அதோடு பள்ளியின் கோ-கோ மற்றும் கைப்பந்து அணியிலும் இடம்பிடித்திருக்கிறார் ஆல்ட்ரின். ஒரு நல்ல ஓட்டப்பந்தய வீரராகவும் இருந்த அவருக்கு டிராக் அண்ட் ஃபீல்ட் என வந்தபோது, அவர் முதலில் உயரம் தாண்டுவதில் தான் தனது கவனத்தை செலுத்தி இருக்கிறார். அவருக்காகவே தாண்டும் தளத்தை தயார் செய்து கொடுத்தாக டேனியல் தாமஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்களில் ஒருவரான அனிட்டா ஐரீன் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

“உள்ளூர் பர்னிச்சர் கடையில் ஆல்ட்ரினுக்காக ஒரு ஜம்ப் பிட் தைக்கப்பட்டது. பட்டியை வைக்க நிலையான துருவங்களைப் பயன்படுத்தினோம். ஒரே ஒரு மாணவருக்கு ஜம்பிங் பிட் வாங்குவது கடினமாக இருந்ததால் எங்களால் முடிந்ததைச் சமாளித்தோம். ஆல்ட்ரின் நீளம் தாண்டுதல் செல்ல இதுவும் ஒரு காரணம் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.
தேவாலயங்கள் நிறைந்து காணப்படும் முதலூர் தான் அந்த பகுதியில் உள்ள கிறிஸ்தவ மக்கள் முதலில் குடியேறினார்களாம். இதனால் தான், அந்த அழகிய ஊருக்கு முதலூர் (முதல் ஊர்) என்று பெயர் சூட்டப்பட்டதாம். இவ்வூரில் உள்ள ஒரு பெந்தகோஸ்தே குடும்பத்தில் பிறந்த ஜெஸ்வின் ஆல்ட்ரினின் கொள்ளுத் தாத்தா “ஜோசப் ஆபிரகாம்” மஸ்கோத் அல்வா தயார் செய்வதில் வேர்ல்டு ஃபேமஸ். அவர்களின் குடும்பத்தினர் நடத்தி வரும் 2 பேக்கரிகளில் இருந்து உலகில் உள்ள 12 நாடுகளுக்கு ‘மஸ்கோத் அல்வா’ ஏற்றுமதியாகிறது.

தனது குடும்ப தொழிலையும் அவ்வப்போது கவனித்த இளம் வீரர் ஆல்ட்ரினுக்கு முழுக்கவனமெல்லாம் நீளம் தாண்டுதலில் இருந்துள்ளது. மிகச்சிறப்பான தாண்டும் உடலமைப்பை பெற்றுள்ள அவர், கடந்த ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி நடந்த தென் மண்டல அளவிலான போட்டியில் 7.97 மீட்டர் தூரம் தாண்டி தனது தேசிய சாதனையை பதிவு செய்தார். கடந்த மார்ச் 13ம் தேதி திருவனந்தபுரத்தில் நடந்த இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் 8.20 மீட்டர் தூரத்தை கடந்து முன்பு தான் பதிவு செய்த தேசிய சாதனையை முறியடித்தார். இந்த போட்டியில் ஆல்ட்ரின் 5 முறை 8 மீட்டர் தூரத்தை கடந்து அசத்தி இருந்தார்.

இந்த நிலையில் தான் ஆல்ட்ரின் ஏப்ரல் 03ம் தேதி நடந்த நேஷனல் ஃபெடரேஷன் கோப்பை போட்டியில் 8.26 மீட்டர் தூரம் வரை தாண்டி, தனது முந்தைய 2 சிறந்த சாதனைகளையும் முறியடித்தார். இந்த அசத்தலான சாதனை மூலம் ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் விளையாட்டுகளுக்கான தகுதித் தரத்தை விஞ்சிய அவர், அந்த சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்று இருக்கிறார்.

தாய் மற்றும் தந்தையின் அரவணைப்பில் திளைத்து வரும் ஆல்ட்ரின் தற்போது இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற கியூபாவைச் சேர்ந்த பயிற்சியாளர் யோன்ட்ரி பெட்டான்சோஸுடன் பயிற்சியைத் தொடங்கியுள்ளார். சமீபத்திய போட்டிகளில் பதிவு செய்த முடிவுகளையே பயிற்சியிலும் அவர் வெளிப்படுத்தி வருகிறார்.
“யோன்ட்ரியுடன் விஷயங்கள் ஒத்துபோகின்றன. நான் இன்னும் மேம்படுத்த வேண்டிய பல பகுதிகளை அவர் கண்டுபிடித்துள்ளார். நான் கடின பயிற்சியில் ஈடுபடுவேன் மற்றும் என்னால் முடிந்ததை கொடுப்பேன்” என்று ஆல்ட்ரின் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“