/tamil-ie/media/media_files/uploads/2022/01/tamil-indian-express-2022-01-25T145935.284.jpg)
Brendan Taylor Tamil News: ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டானாக செயல்பட்டவர் பிரன்டன் டெய்லர். இவரின் சமீபத்திய ட்விட்டர் பதிவில் திடுக்கிடும் தகவலை பகிர்ந்துள்ளார். அதில் அவர், இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள், கிரிக்கெட் போட்டிகளில் தன்னை மேட்ச் பிக்சிங் மற்றும் ஸ்பாட் பிக்சிங் செய்ய வற்புறுத்தியதாகவும், இல்லையென்றால் அவர் போதைப்பொருள் உட்கொண்ட வீடியோவை வெளியிடுவோம் என்று கூறி மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜிம்பாப்வே வீரரை மிரட்டிய இந்திய புக்கிகள்
2004 முதல் 2021 வரை ஜிம்பாப்வே அணிக்காக நீண்ட காலம் விளையாடிய வீரர்களுள் ஒருவராக இருக்கும் பிரன்டன் டெய்லரை, கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்திய தொழில் அதிபர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர், ஜிம்பாப்வேயில் டி20 தொடர் நடத்துவதற்கான ஸ்பான்சர்ஷிப் சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிப்பதற்காக டெய்லர் இந்தியா வரவேண்டும் என வேண்டிக்கேட்டுள்ளார். மேலும் டெய்லர் இந்தியா வர அவருக்கு 15,000 அமெரிக்க டாலர் தருவதாகவும் கூறியுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/01/tamil-indian-express-2022-01-25T151146.234.jpg)
அந்த தொழிலதிபரின் பேச்சை நம்பிய டெய்லரும் இந்தியா வந்துள்ளார். இங்குள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்த அவருக்கு மது விருந்து அளிக்கப்பட்டுள்ளது. இதன்பிறகு, கொக்கைன் என்கிற போதைப்பொருளையும் கொடுத்துள்ளனர். டெய்லரும் அதை வாங்கி பயன்படுத்தி இருக்கிறார்.
மறுநாள் காலை டெய்லர் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு வந்த அந்த தொழிலதிபர்கள், அவர் போதைப்பொருள் உட்கொண்ட வீடியோவை காட்டியுள்ளனர். பின்னர் அவரிடம், சர்வதேச அளவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் ‘ஸ்பாட் பிக்சிங்’ செய்ய சம்மதிக்க வேண்டும் என வற்புத்தியுள்ளனர். இல்லாவிட்டால் அவர் போதைப்பொருள் உட்கொண்ட வீடியோவை பொதுவெளியில் வெளியிடுவோம் என்று கூறி மிரட்டியுள்ளனர். இதனால், உயிருக்கு பயந்து போன டெய்லர், சூதாட்டத்தில் ஈடுபட சம்மதித்து முன்தொகையாக 15,000 டாலர்களை பெற்றுக்கொண்டுள்ளார். வேலை முடிந்ததும் மேலும் 20,000 டாலர்கள் தருவதாகவும் அவர்கள் அவரிடம் கூறியுள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/01/tamil-indian-express-2022-01-25T151132.117.jpg)
இந்த மாய வாலையில் தான் தெரியாமல் சிக்கி கொண்டதாகவும், முட்டாள்தனமாக கொஞ்சம் கொக்கைன் எடுத்துக்கொண்டேன் என்றும் டெய்லர் பகிர்ந்துள்ள அந்த ட்விட்டர் பதிவில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும், அங்கிருந்து தப்பித்து சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்பதால் வேறு வழியில்லாமல் அந்த பணத்தை தான் பெற்று கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நான் ஒரு ஏமாற்று பேர்வழி இல்லை…
இதன்பிறகு தாயகம் திரும்பிய டெய்லருக்கு மன அழுத்தம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. சில நாட்கள் கழித்து அந்த தொழிலதிபர் கொடுத்த தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால், டெய்லர் அதை திரும்ப கொடுக்கவில்லை. மேலும், இந்த விவகாரம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) உடனடியாக புகார் தெரிவிக்காத அவர், 4 மாதங்கள் கழித்து புகார் கொடுத்துள்ளார்.
டெய்லர் தனது குடும்பத்தின் நலனை பாதுகாக்கும் பொருட்டு தான் ஐ.சி.சி.யிடம் தகவல் தெரிவிக்க காலம் தாழ்த்தியாகவும், அவர்கள் தன்னை புரிந்து கொள்வார்கள் என நினைத்தேன் என்றும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து டெய்லர் அந்த பதிவில், "எந்தவொரு போட்டியிலும் நான் சூதாட்டத்தில் ஈடுபட்டது கிடையாது. நான் ஒரு ஏமாற்று பேர்வழி இல்லை. என் மீதான புகார் குறித்த ஐ.சி.சி. விசாரணையில் முழுமையாக பங்கேற்றேன். எனக்கு பல ஆண்டுகள் தடை விதிக்க ஐ.சி.சி. முடிவு எடுத்துள்ளது. இதனை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
எனது கதை கிரிக்கெட் வீரர்கள் எந்தவொரு சூதாட்ட அணுகுமுறையையும் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்பதற்கு பாடமாக இருக்க வேண்டும். எனது வாழ்க்கையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர மறுவாழ்வு மையத்துக்கு செல்ல இருக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/01/tamil-indian-express-2022-01-25T151121.054.jpg)
35 வயதான பிரன்டன் டெய்லர் கடந்த 2021 செப்டம்பரில் ஓய்வு பெறும் வரை ஜிம்பாப்வே அணிக்காக 34 டெஸ்ட்கள், 205 ஒருநாள் போட்டிகள் மற்றும் 45 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இங்கிலாந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் கோல்பாக் வீரராகவும் டெய்லர் பங்கேற்று இருக்கிறார். கடந்த 2015 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திற்கு பிறகு, சில ஆண்டுகள் ஜிம்பாப்வே அணிக்காக விளையாடுவதில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டார். பின்னர், 2017ம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் ஜிம்பாப்வே அணியில் மீண்டும் இணைந்தார்.
To my family, friends and supporters. Here is my full statement. Thank you! pic.twitter.com/sVCckD4PMV
— Brendan Taylor (@BrendanTaylor86) January 24, 2022
தொடர்ந்து கண்காணித்து வரும் ஊழல் தடுப்புப் பிரிவு
இது தொடர்பாக பிசிசிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவு தலைவர், ஷபீர் கந்த்வாவாலா கூறுகையில், "டெய்லரின் நிலைமையை வாரியம் தெரிந்துகொண்டுள்ளது. வழக்கமாக பாதிக்கக்கூடிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களையும், போதுமான பணம் இல்லாத வீரர்களையும் தான் புக்கிகள் குறிவைக்கிறார்கள். அதிலும் முக்கியமாக இந்தியாவைச் சேர்ந்த புக்கிகளால் தான் இவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள்.
ஆனால், நல்ல அம்சம் என்னவென்றால், வீரர்கள் தற்போது ஊழல் தடுப்புப் பிரிவுக்கு புகாரளிக்கத் தொடங்கியுள்ளனர். மேலும் யாராவது அவர்களை அணுகியிருந்தால் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்தியாவில், புக்கிகள் எப்படி அவர்களை கவர்ந்திழுக்க முயற்சிப்பார்கள் என்பதை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் அமர்வுகளை ஊழல் தடுப்புப் பிரிவு வழங்கி வருகிறது. இந்தியா கிரிக்கெட்டின் மையமாக இருப்பதால், முன்னோக்கிச் செல்லும் சவால்களை நாங்கள் அறிவோம். கடந்த சில ஆண்டுகளில், பிசிசிஐ இந்தியா முழுவதும் புகார்களை பதிவு செய்ய முடிந்தது, அது எங்களுக்கும் உதவியது." என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் சிக்கிய வீரர்கள்…
கடந்த ஏப்ரல் 2021ல், இதுபோன்ற மேட்ச் பிக்சிங் விவகாரத்தில் மற்றொரு ஜிம்பாப்வே நட்சத்திரமான ஹீத் ஸ்ட்ரீக் சிக்கியுள்ளார். அவருக்கு எட்டு ஆண்டுகள் விளையாட தடை வழங்கப்பட்டுள்ளது. ஹீத் ஸ்ட்ரீக், இந்திய தொழிலதிபர் ஒருவருக்கு தகவல் கொடுத்ததற்காகவும், வீரர்களை அறிமுகப்படுத்தியதற்காகவும், 70,000 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பிட்காயின்களைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2022/01/Screenshot-2022-01-25-at-3.14.31-PM.png)
ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவு விசாரணையின்படி, ஜிம்பாப்வே அணி, இந்தியன் பிரீமியர் லீக், வங்காளதேச பிரீமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் மற்றும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஊழல் அணுகுமுறைகளை வெளிப்படுத்தத் தவறியதாகவும், உள்ளிருந்து தகவல்களை அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், இந்திய தொழிலதிபரிடமிருந்து வந்த பல அணுகுமுறைகள் குறித்து புகாரளிக்க தவறியதற்காக, பங்களாதேஷ் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன், கடந்த அக்டோபர் 2019ல் சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது.
/tamil-ie/media/media_files/uploads/2022/01/tamil-indian-express-2022-01-25T151539.428-1.jpg)
ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த 6 வீரர்கள், புக்கிகளுடன் தொடர்பில் இருந்ததற்காக அல்லது பணத்தை ஏற்றுக்கொண்டதற்காக நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, அவர்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதே விவகாரத்தில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு ஹாங்காங் வீரர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. மற்றொரு வீரருக்கு 5 ஆண்டுகள் தடை வழங்கப்பட்டது.
டி20 லீக்களில் ஸ்பாட் பிக்ஸிங்சில் ஈடுபட்டதாகவும் சில வீரர்களுக்கு தடை வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் (பிஎஸ்எல்) நடந்த விதிமீறல்களுக்காக, விக்கெட் கீப்பர் வீரர் உமர் அக்மல் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் ஷர்ஜீல் கான் ஆகியோர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.