45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா இதுவரை 32 ஆட்டங்களில் விளையாடி ஒரு ஆட்டத்தில் கூட தோல்வி பெறாமல் வெற்றி நடை போட்டு வருகிறது. இதன் மூலம் இந்திய அணி தங்கம் வெல்லும் கனவினை நோக்கி முன்னேறி வருகிறது.
இந்த சூழலில், சர்வதேச செஸ் அரங்கில் இந்தியாவுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட்டில் சிறப்பாகச் செயல்படும் அணிக்கு வழங்கப்படும் ‘நோனா கப்ரின்டாஷ்விலி கோப்பை’, 2022 சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. தற்போது அந்த கோப்பையை காணவில்லை என்று அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (ஏ.ஐ.சி.எஃப்) அதிகாரிகள் மூன்று பேர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் உறுதி செய்துள்ளனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Indian chess federation left red-faced as Chess Olympiad’s Nona Gaprindashvili Cup, given to India at Chennai 2022, goes missing
சில வாரங்களுக்கு முன், கோப்பையை இந்தியா திருப்பித் தருமாறு கோரி உலக செஸ் நிர்வாகக் குழுவான ஃபிடே (FIDE) இந்திய செஸ் கூட்டமைப்புக்கு மெயில் அனுப்பியுள்ளது. அதில், புடாபெஸ்டில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளையுடன் நிறைவுபெறுவதால், 11வது சுற்று முடிந்த பிறகு கோப்பை வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி பொறுப்பேற்ற தற்போதைய இந்திய செஸ் கூட்டமைப்பு நிர்வாகம், கோப்பை இந்தியாவில் இருக்க வேண்டும் என்பதை அப்போதுதான் உணர்ந்ததாக கூறப்படுகிறது. பின்னர், புது டெல்லி மற்றும் சென்னையில் உள்ள இந்திய செஸ் கூட்டமைப்பு அலுவலகங்களிலும், கடைசியாகப் பார்த்த சென்னை ஹோட்டலிலும் தேடுதல் நடத்தப்பட்டது. மேலும், முந்தைய இந்திய செஸ் கூட்டமைப்பு அலுவலகப் பொறுப்பாளர்களைத் தொடர்பு கொண்டு, வீரர்களிடம் கூட அவர்கள் கோப்பையை எடுத்தீர்களா? என்று கேட்கப்பட்டுள்ளது.
“தற்போது, கப்ரின்டாஷ்விலி கோப்பை எங்குள்ளது என்பது எங்களுக்குத் தெரியாது. இது தேசப் பெருமைக்குரிய விஷயம் என்பதால் அதைக் கண்டறிய நாங்கள் கடுமையாக முயற்சித்து வருகிறோம். எங்கள் தேடல் பலனளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், ”என்று இந்திய செஸ் கூட்டமைப்பு செயலாளர் தேவ் ஏ படேல் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
இந்திய செஸ் கூட்டமைப்பு துணைத் தலைவர் அனில் குமார் ரைசாடா இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், "சில நாட்களாக கோப்பையை தேடி வருகிறோம். போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் கவுரவம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் அதை தீர்த்து வைப்போம் என்று நம்புகிறோம். இது ஒரு பாரதூரமான பிரச்சினை, மேலும் நம் அனைவருக்கும் மிகவும் சங்கடமாக உள்ளது. முந்தைய நிர்வாகம் கோப்பையைக் கண்டுபிடிக்க உதவாத பதில்களை அளிக்கிறது" என்று அவர் கூறினார்.
இந்திய செஸ் கூட்டமைப்பின் மற்றொரு மூத்த அதிகாரி பேசுகையில், "நாங்கள் பதிவுகளையும் பார்த்தோம், ஆனால் பலனில்லை. நாங்கள் தமிழ்நாடு அரசு மற்றும் மாநில செஸ் சங்கத்திடமும் சரிபார்த்துள்ளோம். நாங்கள் பொறுப்பேற்ற போது தற்போதைய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படவில்லை. அது எங்கே இருக்கக்கூடும் என்று எங்களிடம் எதுவும் தெரியவில்லை. சாத்தியமான ஒவ்வொரு இடத்தையும் நாங்கள் சரிபார்த்துள்ளோம், வீரர்களிடம் கூட கேட்டோம், ” என்று அவர் கூறினார்.
அகில இந்திய செஸ் கூட்டமைப்பில் நடந்த நிதி முறைகேடுகள் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர், தற்போதைய நிர்வாகம், காணாமல் போன கோப்பை, காணாமல் போன ஆவணங்கள், டிஜிட்டல் பதிவுகள் மற்றும் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து முழு விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை நியமித்துள்ளது. ஏ.ஐ.சி.எஃப் கணக்குகள், பெரிய தொகைகள் தொடர்பான சில நிதி முறைகேடுகளை நாங்கள் கவனித்தோம். எனவே, கோப்பையைத் தவிர, மற்ற விவகாரங்களை விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை நியமித்துள்ளோம்,'' என்றார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் சென்னை ஒலிம்பியாட் போட்டியின் போது இந்திய செஸ் கூட்டமைப்பின் முன்னாள் செயலாளர் பொறுப்பில் இருந்த பாரத் சிங் சவுகானை அணுகியபோது, அவர் மருத்துவமனையில் இருப்பதாகக் கூறினார், மேலும் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். இதேபோல் ஃபிடே சி.இ.ஓ எமில் சுடோவ்ஸ்கி -யும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
நோனா கப்ரிண்டாஷ்விலி கோப்பை பின்னணி
செஸ் ஒலிம்பியாட்டின் ஓபன் பிரிவில் வெற்றி பெறும் அணி ‘ஹாமில்டன்-ரசல் கோப்பை’ வழங்கப்படுகிறது. பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணி ‘வேரா மெஞ்சிக் கோப்பை’ வழங்கப்படுகிறது. ஒருங்கிணைந்த செயல்பாட்டில் வெற்றி பெறும் அணி 'நோனா கப்ரிண்டாஷ்விலி கோப்பை'யைப் பெறுகிறது. இது ஜார்ஜிய செஸ் வீரரின் பெயரால் அழைக்கப்படுகிறது. கோப்பைகள் சுழற்றல் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. அதாவது வெற்றியாளர்கள் அடுத்த ஒலிம்பியாட் நடைபெறும் வரை இரண்டு ஆண்டுகளுக்கு அதை வைத்திருப்பார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.