ஆஸ்திரேலியா உடனான மூன்று டி-20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி இன்று மும்பையில் இருந்து புறப்பட்டு ஆஸ்திரேலியா சென்றது.
ஆஸ்திரேலியா பறந்த இந்திய அணி:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான போட்டி என்றால் சொல்லவே தேவையில்லை. ஹர்பஜன் சிங் - சைமண்ட்ஸ் தொடங்கி கோலி வரை சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. இந்நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
அங்கு, மூன்று டி-20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.முதலில் 20 ஓவர் போட்டி தொடர் நடக்கிறது. இதில் முதல் ஆட்டம் வருகிற 21-ந்தேதி நடக்கிறது. 2-வது ஆட்டம் 23-ந்தேதியும், 3-வது ஆட்டம் 25-ந்தேதியும் நடக்கிறது.இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.
ஜனவரி 12-ம் தேதி முதல் ஜனவரி 18-ம் தேதி வரை ஒருநாள் தொடரும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது இந்த தகவலை பிசிசிஐ, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
அதிகாலையில் புறப்பட்ட விமானத்தில் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு கிளம்பிச் சென்றனர். அவர்கள் விமானநிலையத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது “பேட்ஸ்மேன்கள் பொறுப்புணர்வுடன் விளையாடி ரன்கள் குவிக்க வேண்டியது அவசியமாகும். . இப்போது நம்மிடம் சிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அவர்களால் ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.