இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருப்பவர்களில் ரவி சாஸ்திரி உட்பட ஆறு பேரின் விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் நியூசிலாந்து பயிற்சியாளர் மைக் ஹெசன், முன்னாள் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் மற்றும் இலங்கை பயிற்சியாளர் டாம் மூடி, முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் மற்றும் ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஃபில் சிம்மன்ஸ், முன்னாள் இந்திய அணி மேலாளர் லால்சந்த் ராஜ்புட், முன்னாள் இந்திய பீல்டிங் பயிற்சியாளர் ராபின் சிங் மற்றும் ரவி சாஸ்திரி ஆகிய 6 பேரின் விண்ணப்பங்கள் இறுதியாகியுள்ளன.
இவர்கள் அனைவரும், கபில் தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி முன்பு தங்கள் விளக்கத்தை அளிப்பார்கள். இந்த வார முடிவிலோ அல்லது அடுத்த வார தொடக்கத்திலோ யார் பயிற்சியாளர் என்ற இறுதி முடிவு எடுக்கப்படும்.
கபில் தேவ் தலைமையிலான இந்த கமிட்டியில் அன்ஷுமன் கெய்க்வாட் மற்றும் முன்னாள் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் ஷாந்தா ரங்கசாமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
முன்னதாக, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் கிளம்புவதற்கு முன் கேப்டன் விராட் கோலி, ரவி சாஸ்திரியே பயிற்சியாளராக தொடர வேண்டும் என தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தார்.
இப்போதுள்ள இந்திய அணியில் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளராக பாரத் அருண், பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பங்கர் மற்றும் பீல்டிங் பயிற்சியாளராக ஆர் ஸ்ரீதர் ஆகியோர் உள்ளனர். இவர்களது பதவிக் காலம் கடந்த உலகக் கோப்பையோடு நிறைவு பெற்ற நிலையில், 45 நாட்களுக்கு அவர்களது பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.