Indian-cricket-team | rohit-sharma | netharlands: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற 5 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்க உள்ளன.
அக்டோபர் 5ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கு முன்னதாக, தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடக்கும் 9வது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி திருவனந்தபுரம் சென்றுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இரு அணிகளின் முந்தைய பயிற்சி ஆட்டங்கள் நேற்று சனிக்கிழமை மழையால் பாதிக்கப்பட்டன. செவ்வாய்க்கிழமையும் மழை அச்சுறுத்தல் உள்ளது.
முன்னதாக, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான பயிற்சி ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதேபோல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நெதர்லாந்தின் பயிற்சி ஆட்டமும் இரண்டாவது இன்னிங்ஸின் போது மழையால் பாதிக்கப்பட்டது.
இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இருப்பினும், டாஸ் முடிந்த சிறிது நேரத்திலேயே கவுகாத்தியில் உள்ள பர்சபரா ஸ்டேடியத்தில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. நகரம் இருண்ட மேகங்களால் சூழப்பட்டது, இதன் விளைவாக, போட்டி கைவிடப்பட்டது.
இந்திய அணியின் முதல் பயிற்சி ஆட்டம் வாஷ்-அவுட் செய்யப்பட்டாலும், செவ்வாய்க்கிழமை நடக்கவுள்ள பயிற்சி ஆட்டம் முக்கிய உலகக் கோப்பை போட்டிக்கான முன்னோட்டமாக இருக்கும். எனவே, இந்திய அணி முழுபலத்துடன் களமிறங்கும்.
2023 உலகக் கோப்பைக்கான இந்திய அணி
பேட்ஸ்மேன்கள்: ரோஹித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ்
விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன்கள்: இஷான் கிஷன், கே.எல் ராகுல்
வேகப்பந்து - ஆல்ரவுண்டர்கள்: ஹர்திக் பாண்டியா (துணைகேப்டன்), ஷர்துல் தாக்கூர்
சுழல் ஆல்ரவுண்டர்கள்: ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின்
வேகப்பந்து வீச்சாளர்கள் : ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்
சுழற்பந்து வீச்சாளர்: குல்தீப் யாதவ்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“