கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவிடம் வருங்கால கணவர் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்மிருதி மந்தனா. 27 வயதான ஸ்மிருதி மந்தனா இந்திய அணிக்காக 200க்கும் மேற்பட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ளார். இந்தியா பல போட்டிகளில் வெற்றி பெற காரணமாக இருந்தவர் ஸ்மிருதி மந்தனா.
சமீபத்தில் மும்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் டெஸ்ட் வெற்றியிலும் ஸ்மிருதி மந்தனா முக்கிய பங்கு வகித்தார். இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் ஸ்மிருதி மந்தனா 74 ரன்களை எடுத்தார், இதன் மூலம் இந்திய அணி 406 ரன்கள் எடுக்க உதவினார்.
இந்த நிலையில், ஸ்மிருதி மந்தனா மற்றும் விக்கெட் கீப்பர்-பேட்டர் இஷான் கிஷன் சமீபத்தில் பாலிவுட் நடிகர் தொகுத்து வழங்கும் வினாடி வினா நிகழ்ச்சியான கவுன் பனேகா க்ரோர்பதியில் கலந்துக் கொண்டனர். இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் கவுன்சிலுக்கு பணம் திரட்டுவதற்காக ஸ்மிருதி மந்தனாவும் இஷான் கிஷனும் கவுன் பனேகா க்ரோர்பதியில் பங்கேற்றனர்.
தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிப்பரான இந்த நிகழ்ச்சியில் ஸ்மிருதி மந்தனாவிடம் ஒரு ரசிகர் பெருங்களிப்புடைய கேள்வியைக் கேட்டபோது அவர் சிரிப்பில் மூழ்கினார்.
அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு இன்ஸ்டாகிராமில் அதிக அளவு ஆண் ரசிகர்கள் இருக்கிறார்கள். உங்களுக்கு எந்த மாதிரி குணம் உடைய ஆண்களை மிகவும் பிடிக்கும் என்று கேட்டார். இதற்கு அமிதாப் பச்சன் அந்த ரசிகரை பார்த்து, உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா என்று கேட்டார். அதற்கு அந்த ரசிகர் எனக்கு இன்னும் ஆகவில்லை. அதனால் தான் நான் இந்த கேள்வியை ஸ்மிருதி மந்தனாவிடம் கேட்கிறேன் என்று கூறினார்.
ஒரு சிறிய சிரிப்புக்குப் பிறகு, ஸ்மிருதி மந்தனா, "இந்தக் கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை, நிச்சயமாக" என்று பதிலளித்தார், மேலும், "அவர் ஒரு நல்ல பையனாக இருக்க வேண்டும், அவர் என்னைக் கவனித்து, என் விளையாட்டைப் புரிந்துகொள்பவராக இருக்க வேண்டும். நான் விரும்பும் இரண்டு குணங்கள் இவைதான். கிரிக்கெட் விளையாடும் ஒரு பெண்ணாக என்னால் என் கணவருடன் அதிக நேரம் செலவழிக்க முடியாது. அதையும் அவர் புரிந்துகொண்டு என்னை கவனித்துக் கொள்ள வேண்டும். இதுதான் நான் முக்கியமாக பார்க்கக் கூடியது” என்றும் ஸ்மிருதி மந்தனா பதிலளித்தார்.
நிகழ்ச்சியில், ஸ்மிருதி மந்தனா தனது கிரிக்கெட் பயணம் குறித்தும் விரிவாக பேசினார். தனது தந்தை எப்படி கிரிக்கெட் வாழ்க்கையை அவரது பெற்றோரால் இழந்தார் என்றும், அது அவரது குழந்தைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்கத் தூண்டியது என்றும் ஸ்மிருதி மந்தனா குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“