ஆஸ்திரேலியா வெற்றித் தொடரிலிருந்து இன்று சேலம் சின்னப்பம்பட்டிக்குத் திரும்பியா கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு ஊர் மக்கள் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் விளையாடும்போது, ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று வித போட்டிகளிலும் சர்வதேச அளவில் அறிமுகமான முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
நடராஜன் தமிழ்நாட்டின், சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை தங்கராஜ் ஒரு நெசவுத் தொழிலாளி, தாய் சாந்தா சாலையோரக் கோழிக் கடை நடத்துபவர். நடராஜன் 12 ஆம் வகுப்புவரை சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் விளையாட்டு ஒதுக்கீட்டில் சேலம், ஏ. வி. எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக மேலாண்மை இளமாணி படித்து முடித்து, அதே கல்லூரியில் முதுகலை வணிக மேலாண்மை பட்ட மேற்படிப்பு படித்தார்.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது நான்கு கூடுதல் பந்து வீச்சாளர்களில் ஒருவராகத் தான் நடராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், மற்ற வீரர்களின் காயம் காரணமாக டி- 20, ஒரு நாள் போட்டி, டெஸ்ட்த் தொடர் என மூன்று விட போட்டியிலும் நடராஜன் களமிறக்கப்பட்டார்.
அதிலும், குறிப்பாக திசம்பர் 04, 2020ல் தான் பங்கேற்ற முதல் சர்வதேச டி-20 அறிமுக போட்டியில் நான்கு ஓவர்கள் வீசி, 30 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து, 3 விக்கெட் வீழ்த்தி, இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா மகத்தான வெற்றி பெற்றது. பிரிஸ்பேனில் நடைபெற்ற நான்காவது போட்டியில் 328 ரன் எடுத்து சாதனை படைத்தது. இந்த வெற்றியின் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில், ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி, இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.