ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் 3 டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (எம்.சி.ஜி) நேற்று வியாழக்கிழமை (டிச.26) முதல் பாக்சிங் டே போட்டியாக தொடங்கி நாடடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 86 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்தது. ஸ்டீவ் சுமித் 68 ரன்களுடனும், கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை 2ம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
122.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 474 குவித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக சதம் விளாசிய ஸ்மித் 140 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டை கைப்பற்றினார். தொடர்ந்து இந்தியா தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் ஆடி வருகிறது.
மன்மோகன் சிங் மரணம் - கைகளில் கருப்பு பட்டை அணிந்து ஆடும் இந்தியா
இந்நிலையில், இன்றைய 2-ம் நாள் ஆட்டத்தின்போது இந்திய அணி வீரர்கள் கைகளில் கருப்பு பட்டை கட்டி விளையாடி வருகின்றனர். இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) நேற்று வியாழக்கிழமை இரவு மறைந்த நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய வீரர்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
இதுகுறித்து பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் நினைவாக இந்திய அணியினர் கையில் கருப்பு பட்டை அணிந்துள்ளனர்" என்று கூறியுள்ளது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனது சமூக வலைதள பக்கத்தில், “டாக்டர் மன்மோகன் சிங் ஜி உண்மையிலேயே ஒரு வகையானவர். குறிப்பாக நமது நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை கொண்டு வருவதில் அவரது பங்களிப்பு எதிர்கால சந்ததியினரால் ஆய்வு செய்யப்படும்." என்று பதிவிட்டுள்ளார்.
மன்மோகன் சிங் 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான யு.பி.ஏ அரசாங்கங்களில் இரண்டு முறை பிரதமராக இருந்தார், மேலும் 1991 ஆம் ஆண்டு நரசிம்மராவ் அரசாங்கத்தில் நிதி அமைச்சராக இருந்தார். இந்த காலக்கட்டத்தில் தான் இந்தியப் பொருளாதாரம் வெளியுலகிற்கு திறக்கப்பட்டது. பொருளாதார தாராளமயமாக்கல் சகாப்தத்திற்கு வழிவகுத்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.