இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு டிஎன்ஏ சோதனை, அதாவது மரபணு உடற்பயிற்சி சோதனை முறையை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், அணியில் உள்ள தனிப்பட்ட ஒவ்வொரு வீரரின் மரபணு உடற்கூறு வடிவமைப்பு கண்டறியப்பட்டு, அதன் மூலம் வீரர்களின் உடல் தரத்தை உயர்த்த முடியும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
மேலும், வீரர்களின் வேகத்தையும், தேவையில்லாத கொழுப்பை குறைக்கவும், பொறுமை மனப்பான்மையை வளர்க்கவும், உடற் கட்டமைப்பை மேம்படுத்தவும் இந்த சோதனை உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் உடற்தகுதி பயிற்சியாளர் ஷங்கர் பாஸு மூலம் இந்தச் சோதனை நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து இந்திய அணியின் பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஷங்கர் பாஸு தான் இந்த யோசனையை எங்களிடம் தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான மரபணு சோதனை விரைவில் தொடங்கவிருக்கிறது. இந்த சோதனைக்காக ஒவ்வொரு வீரருக்கும் ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை செலவு செய்யப்பட உள்ளது. இந்த சோதனையின் மூலம், உடலின் கொழுப்பு அளவை தேவைக்கேற்றவாறு வீரர்கள் பராமரிக்க முடியும். இதனால், தொடர்ந்து அவர்கள் ஃபிட்டாக இருக்க முடியும்" என்றார்.