scorecardresearch

பாகிஸ்தான் வரவே வேண்டாம்; ரமீஸ் ராஜாவுக்கு ஆதாரங்களுடன் இந்திய ரசிகர்கள் பதிலடி

இந்தியா நடத்தும் உலகக் கோப்பையில், பாகிஸ்தான் பங்கேற்காவிட்டால், அந்தப் போட்டிகளை யார் பார்ப்பார்கள் என ரமீஸ் ராஜா கருத்து; புள்ளி விவரங்களுடன் இந்திய ரசிகர்கள் பதிலடி

பாகிஸ்தான் வரவே வேண்டாம்; ரமீஸ் ராஜாவுக்கு ஆதாரங்களுடன் இந்திய ரசிகர்கள் பதிலடி

இந்தியா நடத்தும் உலகக் கோப்பையில், பாகிஸ்தான் பங்கேற்காவிட்டால், அந்தப் போட்டிகளை யார் பார்ப்பார்கள் என ரமீஸ் ராஜா கூறியதற்கு, புள்ளி விவரங்களுடன் இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த 2022 ஐ.சி.சி டி20 உலக கோப்பையில் இந்தியா இறுதிப்போட்டிக்குச் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் வெளியேறியது. இருப்பினும் இந்தியா முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தியது. விராட் கோலியின் அபார ஆட்டத்தால் இந்தியா மறக்க முடியாத வெற்றி பெற்ற அந்த போட்டி, இந்தியா கோப்பையை வெல்லாவிட்டாலும், இந்த உலக கோப்பையை ரசிகர்கள் அசைபோட போதுமானதாக உள்ளது.

கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இருதரப்பு தொடர்களை தவிர்த்து ஆசிய மற்றும் உலகக்கோப்பைகளில் மட்டும் மோதி வருகின்றன. அந்த வகையில் இந்த வருடம் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பையில் மோதிய இவ்விரு அணிகளும் அடுத்ததாக 2023 ஆசிய கோப்பையில் மோதுவது கேள்விக்குறியாகியுள்ளது.

ஏனெனில் 16 ஆவது ஆசியக் கோப்பையை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் ஜெய் ஷா தலைமையில் இதர நாடுகள் ஆதரவுடன் பாகிஸ்தான் உரிமையைப் பெற்றுள்ளது. ஆனால் எல்லை பிரச்சினை காரணமாக பாகிஸ்தானுக்கு பயணித்து 2023 ஆசிய கோப்பையில் பங்கேற்க மாட்டோம் என்று பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா போட்டியை பொதுவான இடத்தில் நடத்துவதற்கு அழுத்தம் கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஆசிய கவுன்சில் தலைவராக இருக்கும் நீங்கள் எங்களிடம் கலந்தாலோசிக்காமல் இப்படி பேசியது ஏமாற்றமளிக்கிறது. எங்கள் நாட்டுக்கு நீங்கள் வராமல் போனால் அதே 2023இல் உங்கள் நாட்டில் நடைபெறும் ஐ.சி.சி ஒருநாள் உலகக் கோப்பையில் பங்கேற்க நாங்கள் வரமாட்டோம் என்று தெரிவித்தது.

இருப்பினும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்த கருத்துக்கள் இந்திய ரசிகர்களை சீண்டியுள்ளது.

இந்தியாவில் அடுத்த வருடம் நடக்கும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் விளையாடவில்லை என்றால், அந்தப் போட்டிகளை யார் பார்ப்பார்கள்? நாங்கள் தெளிவாக இருக்கிறோம். ஆசிய கோப்பையில் பங்கேற்க இந்தியா எங்கள் நாட்டுக்கு வந்தால் மட்டுமே இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்கும். எங்கள் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற 2021 டி20 உலக கோப்பையிலும் 2022 ஆசிய கோப்பையிலும் பில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட இந்திய அணியை இரண்டு முறை தோற்கடித்துள்ளோம், என்று ரமீஸ் ராஜா தெரிவித்தார்.

இதற்கு இந்திய ரசிகர்கள் நீங்கள் வரவே வேண்டாம், யார் உங்களை அழைத்தார்கள் என்று புள்ளிவிவரங்களுடன் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் கத்துக்குட்டியான ஜிம்பாப்வேவை மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா எதிர்கொண்ட போட்டிக்கு 82,507 ரசிகர்கள் வந்து ஆதரவளித்தனர். அதே மெல்போர்ன் மைதானத்தில் பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மோதிய உலக கோப்பை ஃபைனலுக்கு 80,462 ரசிகர்கள் மட்டுமே ஆதரவு கொடுத்ததாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டில் நடைபெற்ற ஃபைனல் போட்டியை விட, இந்தியா பங்கேற்ற சாதாரண லீக் போட்டிக்கு அவ்வளவு ஆதரவு கிடைத்த நிலையில், சொந்த மண்ணில் நடைபெறும் உலக கோப்பைக்கு மும்மடங்கு ஆதரவு கிடைக்கும் என்று இந்திய ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.

மேலும் எங்களது நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பையில் உங்களைத் தவிர்த்து எஞ்சிய அனைத்து நாடுகளும் அமோக ஆதரவைக் கொடுக்கும், ஆதரவு கொடுக்கவில்லை என்றாலும் 120 கோடி இந்திய மக்கள் பார்த்து வெற்றி பெற வைப்பார்கள் என்றும் கூறியுள்ளனர்.

1990 முதல் 30 வருடங்களாக எங்களிடம் தோற்று விட்டு 2021இல் பதிவு செய்த ஒரு வெற்றியை பெரிதாக பேசும் நீங்கள், பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கையிடம் 2022 ஆசிய கோப்பையில் 3 நாட்களில் 2 போட்டியில் தோற்றத்தை மறந்து விடாதீர்கள் என்றும் ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளார்கள்.

இதற்கிடையில், சர்வதேச போட்டிகளை நடத்தும் ஐ.சி.சி.யை விட பி.சி.சி.ஐ அதிக வருமானத்தை ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது. ஆசிய கவுன்சிலில் கிடைக்கும் வருமானத்தை இலங்கை போன்ற நாடுகளைப் போல் பங்கு போடாமல் ஆசிய கவுன்சிலுக்கே நிதி வழங்கும் நாடாக இந்தியா உள்ளது. எனவே, பி.சி.சி.ஐ முடிவெடுத்து விட்டால் அதை பாகிஸ்தான் தடுக்க முடியாது. இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்காமல் போனால் அதற்காக ஐசிசியிடம் பங்கு பணமும் கிடைக்காது. மொத்தத்தில் எப்படி பார்த்தாலும் நஷ்டம் பாகிஸ்தானுக்கே தவிர இந்தியாவுக்கு கிடையாது என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Indian fans reply to ramiz raja comment on who will watch world cup in india if pakistan dont play