உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகளை நேரில் காண்பதில் இருக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் கிடைப்பதில்லை என்று போட்டியை நேரில் பார்த்து ரசித்து வரும் இந்திய அணியின் ஆதரவாளர்கள் உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளனர்.
உலககோப்பை கிரிக்கெட் தொடர் துவங்கியதில் இருந்து, அனைவரின் வீடுகளிலும், மதியத்திற்கு மேல் எல்லோரும் கிரிக்கெட் போட்டிகளையே விரும்பி பார்த்து வருகின்றனர். வீடுகள் மட்டுமல்லாது, கிரிக்கெட் மோகம் டீக்கடைகளை கூடவிட்டுவைக்கவில்லை. அந்தளவிற்கு, மக்கள் கிரிக்கெட் மோகத்திற்கு ஆட்பட்டுள்ளனர். டிவியில் பார்க்கும் நமக்கே, இந்தளவிற்கு ஆர்வம், உற்சாக துள்ளல் ஏற்படுகிறது என்றால், போட்டியை நேரில் பார்க்கும் அவர்களுக்கு எத்தகைய அளவிற்கு மகிழ்ச்சி இருக்கும் என்பதை கற்பனை செய்து கூடபார்க்க இயல முடியவில்லை.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலககோப்பை கிரிக்கெட் நேரில் காண, உலகமெங்கும் ரசிகர்கள் இங்கிலாந்தில் குவிந்து வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை, பாரத் ஆர்மி என்ற அமைப்பு, ஐசிசி சார்பு நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது.
இதுதொடர்பாக, பாரத் ஆர்மி அமைப்பின் நிறுவனர் ராகேஷ் படேல் தெரிவித்துள்ளதாவது, எங்கள் அமைப்பின் மூலம் இதுவரை 11 ஆயிரம் டிக்கெட்களுக்கு மேல் விற்பனை செய்துள்ளோம். டிக்கெட் விற்பனையில் பேலட் சிஸ்டத்தை பின்பற்றுகிறோம். யார் வேண்டுமானாலும் டிக்கெட் கேட்டு விண்ணப்பிக்கலாம், ஆனால் நாங்கள் அனுப்பும் பிரியாரிட்டி லிங்கின் மூலம் தேர்வு ஆகும் நபர்களுக்கே டிக்கெட் கிடைக்கும்.
எங்களது முதல் சுற்றில் தேர்வான ரசிகர்கள், இந்தியா - பாகிஸ்தான் போட்டியை கண்டுரசித்தனர். இரண்டாவது சுற்று வெற்றியாளர்கள், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியை பார்த்தனர்.
எங்களிடம் டிக்கெட் வாங்கும் ரசிகர்கள், இங்கிலாந்துக்கு அருகில் உள்ள நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ள வேண்டும். நாங்கள் பரிந்துரைக்கும் ஓட்டல்களில் தங்க வேண்டும் அல்லது இங்கிலாந்தில் உள்நாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டும். இந்த நிபந்தனைகளின்படியே, நாங்கள் டிக்கெட் விற்பனை செய்துவருகிறோம்.
கிரிக்கெட் ரசிகர்கள், 22 நாடுகளிலிருந்து எங்களிடம் டிக்கெட் பெற்று வந்துள்ளார்கள். அவர்களுக்காக, 5 பஸ்களை, போட்டி நடைபெறும் மைதானங்களுக்கு இயக்கிவருகிறோம். இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தான் அதிகளவில் ரசிகர்கள் வந்துள்ளனர். மெக்ஸிகோ மற்றும் கம்போடியா நாடுகளிலிருந்தும் ரசிகர்கள் வருகை தந்துள்ளனர்.
நான் கிரிக்கெட் போட்டியை நிச்சயம் பார்க்கவேண்டும் என்பதற்காக, எனது குடும்பத்தில் உள்ள 25 நபர்களின் பெயர்களிலும் பதிவு செய்ததாகவும், ஆனால் தான் மட்டுமே தற்போது இங்கிலாந்து வந்து போட்டிகளை ரசித்து வருவதாக ஆமதாபாத்திலிருந்து வந்திருந்த ரசிகர் ஒருவர் தெரிவித்தார்.
எங்கள் அமைப்பு, அடுத்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள உலககோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கும் டிக்கெட் வர்த்தகம் மேற்கொள்ள உள்ளதாக ராகேஷ் படேல் மேலும் தெரிவித்தார். கிரிக்கெட் மட்டுமல்லாது, ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின் டிக்கெட் வர்த்தகத்தை துவக்கும் திட்டம் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.