கால்பந்தில் தங்களை நிரூபிக்க இந்திய வீரர்களுக்கு பொன்னான வாய்ப்பு!

12 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் இந்திய அணி சாதனை படைத்துள்ளது

ஐக்கிய அரபு அமீரகத்தில், அடுத்த ஆண்டு ஆசிய கால்பந்து தொடர் நடைபெறவுள்ளது. ஜனவரி 5ம் தேதி முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை நடைபெறும் இந்த மிகப்பெரிய தொடருக்கு, தரவரிசையில் 97-வது இடத்தில் இருக்கும் இந்திய அணியும் தகுதி பெற்றுள்ளது. இந்தத் தொடருக்கு சிறப்பாக தயாராகும் விதத்தில், உயர்தரவரிசை கொண்ட அணிகளுக்கு எதிராக நட்புரீதியிலான ஆட்டங்களில் விளையாடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்க வேண்டும் என இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் ஃபிபா தரவரிசையில் 75-வது இடத்தில் உள்ள சீனாவுக்கு எதிராக நட்புரீதியிலான ஆட்டத்துக்கு இந்திய கால்பந்து சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த ஆட்டம் வரும் அக்டோபர் மாதம் 8ம் தேதி முதல் 16ம் தேதிக்குள் பெய்ஜிங் நகரில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியா, சீனா அணிகள் 17 முறை மோதியுள்ளன. இதில், 12 போட்டிகளில் சீனாவே வென்றுள்ளது. 5 ஆட்டங்கள் டிரா ஆனது. இந்தியா ஒரு போட்டியில் கூட வென்றதில்லை. கடைசியாக 1997ம் ஆண்டு இரு அணிகளும் மோதின. தற்போது 21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இரு அணிகளும் மோத உள்ளன. அதிலும், முதன்முறையாக சீனாவை அதன் மண்ணிலேயே இந்திய அணி எதிர்கொள்கிறது.

இருப்பினும், சமீபகாலங்களாக இந்திய அணி அட்டகாசமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வருகிறது. 173வது தர நிலையில் இருந்த இந்திய அணி, இப்போது 97வது இடத்தில் உள்ளது. இது சாதாரண முன்னேற்றம் அல்ல.. இதற்கான இந்திய அணியின் உழைப்பு அபரிதமானது. அதிலும், தற்போதைய கேப்டன் சுனில் சேத்ரியின் பங்கு மகத்தானது. கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை நடைபெற்ற 12 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் இந்திய அணி சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே ஆட்டத் திறனோடு இந்தியா விளையாடும் பட்சத்தில், சீனாவை மட்டுமல்லாது, ஆசிய கால்பந்து தொடரிலும் சாதித்து, உலக அரங்கில் ‘நாங்கள் தூங்கும் ஜாம்பவான்’ இல்லை என்பதை நிரூபிக்க ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது என்றே கூறலாம்.

இந்திய கால்பந்து அணியின் பெஸ்ட் பெர்ஃபாமன்ஸ் இதுவரை,

1951 – 1962 காலக்கட்டம் இந்திய கால்பந்து அணியின் மிகச் சிறந்த காலக்கட்டம் எனலாம். இந்திய கால்பந்து ஜாம்பவான் சையது அப்துல் ரஹீமின் தலைமையில் இந்திய அணி, ஆசியாவின் சிறந்த அணியாக விளங்கியது. 1951ல் நடந்த ஆசிய விளையாட்டுத் தொடரில், இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

1951ல் இருந்து 1955 வரை நடைபெற்ற Quadrangular தொடரை தொடர்ச்சியாக வென்றது இந்திய கால்பந்து அணி. 1956ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் தொடரில், கால்பந்து போட்டிகளில் நான்காவது பிடித்தது இந்தியா. உலக அணிகள் பங்கேற்கும் கால்பந்து தொடரில், இந்திய கலந்து கொண்டது இது இரண்டாவது முறையாகும். அதுவும் தொடரை நடத்திய ஆஸதிரேலியா அணியை முதல் போட்டியிலேயே 4-2 என்ற கோல் கணக்கில் ஓடவிட்டது இந்திய கால்பந்து அணி.

அதுமட்டுமின்றி, அப்போட்டியில் நெவில்லே என்ற இந்திய வீரர் ஹாட்ரிக் கோல் அடித்து, ஒலிம்பிக்சில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் ஆசிய வீரர் எனும் பெருமையை பெற்றார். அந்த ஒலிம்பிக் தொடரில், அரையிறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்திய அணி, ஒலிம்பிக்சில் அரையிறுதி வரை முன்னேறிய முதல் ஆசிய அணி எனும் பெருமையை பெற்று வரலாற்றை படைத்தது.

சுதந்திரம் அடைந்த பிறகு, 1948ம் ஆண்டு பிரான்ஸை 1-2 எனும் கோல் கணக்கிலும், 1956ம் ஆண்டு சிட்னியில் ஆஸ்திரேலியாவை 1 – 7 என்ற கணக்கிலும் இந்திய அணி வீழ்த்தியது என்றும் மறக்க முடியாத பசுமையான நிகழ்வுகளாகும்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close