தமிழகத்தில் கால்பந்து விளையாட்டு சங்கங்கள் பிளவடைந்துள்ள நிலையில் சங்கங்களை ஒருங்கிணைத்து விரைவில் கால்பந்து போட்டிகளை நடத்த இருப்பதாகவும், கால்பந்து போட்டிகளில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப் போவதாகவும் இந்திய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவர் ராமன் விஜயன் கோவையில் தெரிவித்துள்ளார்.
கோவை ஈச்சனாரி பகுதியில் அமைந்துள்ள ரத்தினம் கல்வி குழுமத்தின் ஸ்போர்ட்ஸ் எக்ஸ்செலன்ஸ் – க்கான பிரத்யேக மையத்தை இந்திய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவர், ராமன் விஜயன் நேற்று துவக்கி வைத்தார்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளிடையே விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக துவங்கப்பட்ட இந்த மையத்தின் புல்வெளி கால்பந்து மைதானத்தை பார்வையிட்ட அவர், மாணவர்களுக்கு கால்பந்தாட்டத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து கூறினார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அவர்,"விளையாட்டு என்பது ஆரோக்கியம் என்பது மட்டுமின்றி அதில் உள்ள தொழில் முறை பயன்கள், வேலை வாய்ப்புகள்" குறித்து பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, "கால்பந்து சங்கங்களை ஒருங்கிணைத்து விரைவில் போட்டிகளை நடத்த உள்ளோம். தற்போது ஐவர் கால்பந்து போட்டிகள் அதிகரித்துள்ளது குறித்த கேள்விக்கு லெவன் அணி விளையாட்டுகளை ஊக்குவிக்கும் விதமாகவே தற்போது இது போன்ற மையங்களை துவக்கி வருவதாகவும் சமீபமாக பெண்கள் கால்பந்து போட்டிகளில் அதிக ஆர்வம் செலுத்தி வருவதால் குறிப்பாக பெண்களுக்கு கால்பந்து போட்டிகளில் முக்கியத்துவம் கொடுக்கப்படும்" என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாணவ மாணவிகள், பெற்றோர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், விளையாட்டு வீரர்கள், ரத்தினம் குழுமத்தின் தலைவர் டாக்டர்.மதன் ஏ.செந்தில் எனப் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“