33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 28 ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 வீரர் - வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்று வியாழக்கிழமை மாலை 5:30 மணிக்கு தொடங்கிய ஆடவருக்கான ஹாக்கி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா - ஸ்பெயின் அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில், தொடக்கத்தில் இருந்து இந்திய அணி அதிரடியாக விளையாடியது.
இறுதியில், ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஸ்பெயினை 2-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு, தொடர்ந்து 2-வது முறையாக இந்திய அணி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. 52 ஆண்டுகளில் இது முதன்முறையாகும். மேலும் இந்த பதக்கம் இந்திய ஹாக்கி அணியின் வரலாற்றில் 13-வது பதக்கமாகும்.
தலை வணங்கிய இந்திய ஹாக்கி அணி வீரர்கள்
இந்த நிலையில், இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வெல்ல உதவிய கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ்-க்கு இந்திய வீரர்கள் அனைவரும் தலை வணங்கி தங்களது மரியாதையை செலுத்தினார்கள். போட்டி முடிந்த பிறகு கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் கோல் போஸ்ட் மேல் அமர்ந்து இருந்த நிலையில், அவருக்கு இந்திய வீரர்கள் அனைவரும் தலை வணங்கினர். ஸ்ரீஜேஷ் இந்தப் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார் என்பதால், அவருக்கு வாழ்த்து தெரிவித்து இந்த மரியாதையை செலுத்தினார்கள்.
ஸ்பெஷல் கிஃப்ட்
இந்திய கோல்கீப்பர் வீரர் ஸ்ரீஜேஷ் சர்வதேச ஹாக்கி போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் நிலையில், அவருக்கு இளையோர் ஹாக்கி அணி பயிற்சியாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“