Asian-games | womens-cricket | indian-cricket-team: ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் முதல் காலிறுதியில் இந்தியா - மலேசியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 15 ஓவர்களில் 173 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அரைசதம் விளாசிய ஷஃபாலி வர்மா 67 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 47 ரன்களும் எடுத்தனர்.
தொடர்ந்து, மலேசியா அணி 174 ரன்கள் என்கிற வெற்றி இலக்கை துரத்த களமிறங்கியது. 2 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. எனினும், உயர் தரநிலை அடிப்படையில் இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
இன்று பிற்பகல் நடைபெறும் இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்- இந்தோனேசியா அணிகள் மோதுகின்றன. நாளை நடக்கும் காலிறுதி ஆட்டங்களில் இலங்கை-தாய்லாந்து, வங்காளதேசம்-ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். 24 ஆம் தேதி நடைபெற உள்ள அரையிறுதியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிப்போட்டி செப்டம்பர் 25ஆம் தேதி நடைபெற உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“