India's Asia Cup team Tamil News: 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற 27 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் இலங்கையில் நடைபெறவிருந்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்தொடரின் கடைசி பதிப்பு ஒரு நாள் போட்டியாக நடத்தப்பட்டது. ஆனால், இம்முறை டி20 வடிவத்தில் இடம்பெற உள்ளது. இத்தொடரில் நடப்பு சாம்பியனான இந்தியா, 7 முறை கோப்பையை வென்ற அணியாக உள்ளது.
இந்நிலையில், ஆசிய கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை கடந்த திங்கள் கிழமை, அகில இந்திய மூத்த தேர்வுக் குழு அறிவித்தது. அதன்படி அணியை கேப்டன் ரோகித் சர்மா வழிநடத்துகிறார். கொரோனா காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்காத ராகுல், விளையாட்டு ஹெர்னியா அறுவை சிகிச்சையில் இருந்து குணமடைந்து மீண்டும் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியில் முன்னணி வீரர் விராட் கோலி மீண்டும் இடம்பிடித்துள்ளனர். அதேவேளையில், சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷான் போன்றோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இருவரும் தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்சிஏ) மறுவாழ்வு பெற்று வருகின்றனர்.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணியைப் பொறுத்தவரை, தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்குவார்கள். 3வது இடத்தில் விராட் கோலி களமாட வாய்ப்புள்ளது. மிடில்-வரிசையில் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா விளையாடுவார்கள் எனத் தெரிகிறது. சுழலில் மிரட்ட அஸ்வின், யுஸ்வேந்திர சஹல், ரவி பிஷ்னோய் போன்ற வீரர்களும், வேகத்தாக்குதல் தொடுக்க புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஆகிய வீரர்களும் உள்ளனர்.
இத்தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல் மற்றும் தீபக் சாஹர் ஆகிய மூன்று வீரர்களும் காத்திருப்புப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில், ஆசிய கோப்பைக்கான அணியைப் பற்றிய தனது மதிப்பீட்டில், அணியின் ஒட்டுமொத்த தேர்வைப் பாராட்டியுள்ள தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவர் கிரண் மோர், இந்தியாவின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் இடம் குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், அணியில் உள்ள மற்ற சுழற்பந்து வீச்சாளர்களின் தேர்வை மறுத்து பேசாத அவர், பட்டியலில் அஷ்வின் பெயரைப் பார்த்து தான் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.
அதோடு, இந்தியா முகமது ஷமி போன்ற ஒருவரை கூடுதல் சீமராக எடுத்திருக்க வேண்டும் அல்லது அஷ்வினுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேலைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார்.
"நான் கூட ஆச்சரியப்பட்டேன். ஒவ்வொரு முறையும் அஸ்வின் எப்படி இந்த அணியில் வர முடியும்? என்று. கடந்த உலகக் கோப்பையில் கூட அவர் அணியில் தேர்வு செய்யப்பட்டார், பின்னர் விளையாடவில்லை. அவரது ஐபிஎல் சாதனையை பாருங்கள், அது அவ்வளவு சிறப்பாக இல்லை. ஷமிக்கு அல்லது அக்சர் படேலுக்கு அந்த இடத்தை வழங்கி வேண்டும் என்று நான் உணர்கிறேன். மேலும் அக்சர் சிறப்பாக பந்துவீசி வருகிறார். ஷமி எனது நம்பிக்கைக்குரிய வீரர். அவர் உலகக் கோப்பையில் விளையாட வேண்டும். எனக்கு விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளர்கள் மட்டுமே வேண்டும். ஷமி புதிய பந்திலும், மிடில் ஓவர்களிலும், ஸ்லாக் ஓவர்களிலும் விக்கெட்டுகளை எடுக்கக் கூடியவர்." என்று கிரண் மோர், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினின் தேர்வு பலமுறை நிபுணர்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டு இருக்கிறது, மற்றும் இருந்த வண்ணமாகவும் உள்ளது. முன்னதாக, தேர்வாளர்களின் மற்றொரு முன்னாள் தலைவரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், இந்திய டி-20 அணியில் அஷ்வின் இடத்தைப் பற்றி கேள்வி எழுப்பினார். மேலும், 8 மாத நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் ஒயிட்- பால் கிரிக்கெட்டுக்கு திரும்பியது குறித்தும் சுட்டிக்காட்டி இருந்தார்.
"இது ஒரு பெரிய கேள்வி. அஸ்வின் குறித்து நான் முற்றிலும் குழப்பத்தில் இருக்கிறேன். அவர் ஏன் கைவிடப்படவில்லை. பிறகு ஏன் அவர் அங்கு இல்லை. இங்கிலாந்தில் டி20 விளையாடவில்லை, பிறகு திடீரென வெஸ்ட் இண்டீஸுக்கு டி20 போட்டிகளில் ஏன் இல்லை? என்பது நம் அனைவருக்கும் குழப்பமாக உள்ளது. ஏனென்றால் உங்களின் முதல் சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா. இரண்டாவதாக சாஹல் அல்லது அக்சர் படேல் அஷ்வின் அல்லது ரிசர்வ் ஸ்பின்னர் இருப்பார். இந்த நான்கு பேரில் இருவர் மட்டுமே விளையாடுவார்கள். வெறுமனே… அஸ்வினைத் தெரியாது… அவருடைய ஆல்-ரவுண்டர் திறன் காரணமாக இருக்கலாம். ஆனால் எனது முதல் விருப்பம் சாஹல் தான்." என்று இந்த மாத தொடக்கத்தில் நடந்த இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடரின் போது கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியிருந்தார்.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா. , ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.