ஆர்.சந்திரன்
ஐசிசி என சுருக்கமாக, குறிப்பிடப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இயக்குனராக இந்திரா நூயி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் வரும் ஜூன் மாதம் இந்த பொறுப்பை முறைப்படி ஏற்பார்.
இதுவரை ஆண்களின் தனிக்காடாக இருந்த கிரிக்கெட் நிர்வாக உலகில், முதல் பெண் இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இந்திரா நூயி என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடந்த கவுன்சில் கூட்டத்தில் ஒருமித்த கருத்து அடிப்படையில் நூயி தேர்வு செய்யப்பட்டார்.
"இந்த கவுன்சிலின் இயக்குனராக தேர்வாகும் முதல் பெண் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மற்ற இயக்குனர்களுடனும், பங்குதாரர்களுடனும் கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து கிரிக்கெட் வளர்ச்சிக்கு பணியாற்றப் போவதும் மகிழ்ச்சியளிக்கிறது" என இந்திரா நூயி கருத்து தெரிவித்துள்ளார்.
ஐசிசி விதிகளின்படி, கடந்த ஜூன் மாத நடந்த முழு கவுன்சில் கூட்டத்தில்தான் சுயேச்சை இயக்குனர் ஒருவரை நியமிப்பது குறித்தும், அவர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
இந்திரா நூயி தற்போதைய நியமன விதிகளின்படி, 2 ஆண்டுகளுக்கு இந்த பொறுப்பில் இருப்பார். எனினும், இது போல, மேலும் இருமுறை அவர் இப்பொறுப்பில் தொடர வாய்ப்புள்ளது என்பதால், அதிகபட்சம் 6 ஆண்டுகள் வரை இப்பதவியில் தொடரலாம் என்பது கவனிக்கத்தக்கது.