தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் கோவையில் சர்வதேச செஸ் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இதில் பல்வேறு நாடுகளிலிருந்து செஸ் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். ஒரு செஸ் விளையாட்டு வீரர் சர்வதேச செஸ் மாஸ்டராக வேண்டும் என்றால் அவர் குறைந்தது 3 சர்வதேச செஸ் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
பல்வேறு பகுதிகளுக்கும் சென்று லட்சக்கணக்கில் பணம் செலவழித்து இத்தகைய போட்டிகளில் பங்கேற்க முடியாத தகுதி வாய்ந்த செஸ் வீரர்களுக்காக தமிழ்நாடு செஸ் சங்கத்தினர் சர்வதேச செஸ் தொடர் போட்டிகளை ஒருங்கிணைத்துள்ளது. இந்த போட்டிகள் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக வீரர்கள், வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் மற்றும், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த செஸ் வீரர்களும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு செஸ் சங்கத்தின் தலைவர் மாணிக்கம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
செஸ் வீரர் வீராங்கணைகள் நார்ம் புள்ளிகளை பெற லட்சக்கணக்கில் செலவு செய்து வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்று செஸ் போட்டிகளில் கலந்து கொளளும் சூழல் இருந்து வந்த நிலையில், தமிழ்நாடு செஸ் கழகம் சார்பில் இந்த போட்டிகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது.
முன்னதாக ஆண்டுக்கு ஒரு சிலர் மட்டுமே செஸ் மாஸ்டராக வந்த நிலையில், தற்போது ஆண்டுக்கு 10 முதல் 20 பேர் வரை செஸ் மாஸ்டராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெற்றது. இதற்காக தமிழக அரசு மேற்கொண்ட விளம்பரங்கள் மூலம் தமிழகத்தில் செஸ் போட்டி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மேலும், போட்டி நடைபெறும் போது சிறந்த வீரர்களை தமிழக அரசு அழைத்துச் சென்று அவர்களை போட்டிகளை காண வைத்தது என தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது தமிழ்நாடு செஸ் சங்கத்தின் துணை தலைவர் அனந்தராம், இணைச் செயலர் பிரகதீஸ்வரன், கோவை மாவட்ட செஸ் சங்கத்தின் செயலாளர் தனசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“