கோவை திரும்பிய மாணவ- மாணவிகளை ஆசிரியர்கள் பெற்றோர் இணைந்து ஆரத்தி எடுத்து வரவேற்று மகிழ்ச்சியடைந்தனர். திருவனந்தபுரத்தில் அண்மையில் நடைபெற்ற உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி சார்பாக பங்கேற்ற கோவையை சேர்ந்த மாணவ, மாணவிகள் 20 பதக்கங்கள் வென்று கவனம் ஈர்த்துள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டியில் இந்தியா, மலேசியா, ஸ்ரீலங்கா, சிங்கப்பூர், வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். சப் ஜூனியர், ஜீனியர், சீனியர் என பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி சார்பாக கோவையை சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர் பங்கேற்றனர்.
ஒற்றை கம்பு வீச்சு, இரட்டைக் கம்பு வீச்சு, வாள் வீச்சு, சிலம்பு சண்டை, அலங்கார வரிசை, மான் கொம்பு, வேல் கம்பு போன்ற பல்வேறு பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. இதில் கோவைபுதூர் பகுதியில் உள்ள ஆஸ்ரம் பள்ளியில் இருந்து கலந்து கொண்ட 10 மாணவர்கள் 20 பதக்கங்கள் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
12 தங்கம், 2 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்கள் பெற்று அசத்தினர். கோவை திரும்பிய மாணவர்களுக்கு கோவைபுதூர் ஆஸ்ரம் பள்ளி வளாகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வெற்றி வாகை சூடி வந்த வீரர், வீராங்கனைகளை பள்ளி ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு சந்தன மாலைகள் அணிவித்தும் சால்வைகள் அணிவித்தும் இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள் தங்களது ஆற்றல் மிகு சிலம்பத் திறனை தங்களது பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்த்தி காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“