இந்திய மல்யுத்த சங்கத் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 11 நாள்களாக டெல்லி ஜந்தர் மந்தரில் இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், விக்னேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா உள்ளிட்ட வீரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இவர்களை பி.டி. உஷா புதன்கிழமை (மே3) சந்தித்துப் பேசினார். முன்னதாக பி.டி. உஷா, வீரர்களின் போராட்டம் ஒழுக்கமின்மையானது. இது நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் எனக் கூறியிருந்தார்.
இந்தப் போராட்டம் தொடர்பாக பேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர், “பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் நாட்டின் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவாக நிற்கும். அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்” எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், பி.டி. உஷாவின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. பி.டி. உஷாவின் சந்திப்புக்கு பின்னர் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசிய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, “பாதிக்கப்பட்ட மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்கும்வரை எங்களுடன் நிற்பதாக கூறினார்.
மேலும் தாம் முதலில் ஓர் விளையாட்டு வீராங்கனை, அதற்கு பின்னர்தான் மற்றதெல்லாம் எனவும் அவர் கூறினார். இந்தப் பிரச்னையை விரைந்து முடித்து நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
மேலும், நாங்கள் பிரிஜ் பூஷண் சிறைக்கு செல்லும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை” எனக் கூறினார். சாக்ஷி மாலிக் ஊடகவியலாளர்களிடம் கூறுகையில், “அவர் ஓர் சிறந்த வீராங்கனை. நாங்கள் அவரை பின்தொடர்ந்தோம். ஆனால் அவர் ஒழுக்கமின்மை எனக் கூறியுள்ளார்.
இங்கே எங்கே ஓழுக்கமின்மை காணப்படுகிறது” எனக் கேள்வியெழுப்பினார்.
இதற்கிடையில், ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் திங்களன்று, மல்யுத்த வீரர்கள் பிரிஜ் பூஷணுக்கு எதிராக எஃப்ஐஆர் கோரி சட்ட அமலாக்க நிறுவனங்களை அணுகுவது இது முதல் முறை அல்ல என்று கூறினார்.
தொடர்ந்து, 2012ஆம் ஆண்டு அவர் மீது 6க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் அளித்தனர் எனவும் அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“