ஐபிஎல் 2018: ரஸ்ஸலின் சிக்சரில் நிமிர்ந்த கொல்கத்தா… பில்லிங்ஸின் அதிரடியால் வெற்றியை சுவைத்த #CSK

இவிங்க ரெண்டு பேரும் எப்பப்பா அவுட் யெல்லோ ஆர்மியே திகைத்து நின்றது. 6 சிக்சர்களுடன் 26 பந்தில் அரைசதம் விளாசினார் ரஸ்ஸல்.

By: Updated: April 11, 2018, 05:18:34 PM

நேற்று இரவு , சென்னை சேப்பாக்க ஸ்டேடியமே அதிர்ந்தது. ஒரு பக்கம் போராட்டம், மறு பக்கம் போராட்டங்களை தாண்டி நடந்த ஐபிஎல் மேட்ச். 2 ஆண்டுகள் தடைக்கு பின், ஐபிஎல் போட்டியில் களம் இறங்கியியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த முறை வெற்றியை கண்டிப்பாக வசப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

மும்பை இந்தியன்ஸ் உடன், முதல் நாள் நடந்த போட்டியில், பிராவோவின் அசூரத்தனமான பேட்டிங்கில் வென்ற சிஎஸ்கே அணி, இம்முறை பில்லிங்கிஸின் ரன் வேட்டையில் கர்ஜித்தது. காலணி வீச்சு, கருப்பு கொடி,போராட்ட முழுக்கங்கள் இவை எல்லாவற்றையும் ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து விட்டு, களத்தில் இறங்கிய சென்னை மற்றும் கொல்கத்தா அணி வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மைதானத்திற்கு வந்த கொல்கத்தா அணி ரசிகர்களுக்கும், மஞ்சள் நிற டீ ஷேர்ட்டுகள் கொடுக்கப்பட்டது அடி தூள் தருணம் தான். கையில் கொல்கத்தா அணியின் கொடி,உடலில் சென்னை சூப்பர் கிங்ஸ் டீ ஷேர்ட் உடன் மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர்களை நீங்கள் கவனித்தீர்களா????

முதலில் டாஸ் வென்ற, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அடுத்தக்கணமமே பேட் மற்றும் க்ளுவோஸ் உடன் ரெடியான நரேன் ஆரம்பமே அசத்தல் தான் என்பது போல் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அடிக்க ஆரம்பித்தார். முதல் 3 பந்துகளிலே 2 சிக்ஸ்ர்கள். என்ன தம்பி இதோ வரேன் என்பது போல் அலேக்காக நரேனை அவுட் செய்தார் தமிழ்ப்புலவர் ஹர்பஜன் சிங்.

அடுத்தடுத்த விக்கெட்டுகளால் தடுமாறிய கொல்கத்தா அணி உத்தப்பாவின் உக்கிர தாண்டவத்தால் சற்று சாந்தம் அடைந்தது. அதன் பின்பு, ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் கிறிஸ் லின்,வாட்சன் பந்தில் ரானா என விக்கெட்டுக்கள் சரிய ,இதோட கொல்கத்தா காலி என நினைத்த சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சி அடையும் வகையிலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ரஸ்ஸல்.

பிராவோ போட்ட 17வது ஓவர் கொல்கத்தாவுக்கு தல தீபாவளி போல். “நானும் வெஸ்ட் இண்டீஸ்காரந்தாண்டா” என ரஸ்ஸல் அடித்த சிக்ஸ் மைதானத்தை விட்டு வெளியே போய் விழுந்தது. பந்து எங்கப்பானு ஷாரூக் தேட, ரசிகர்கள் தேட ஓரே ரன் வெடி தான். இவிங்க ரெண்டு பேரும் எப்பப்பா அவுட் யெல்லோ ஆர்மியே திகைத்து நின்றது. 6 சிக்சர்களுடன் 26 பந்தில் அரைசதம் விளாசினார் ரஸ்ஸல்.

சர்துல் தாகூர் வீசிய கடைசி ஓவரை விட்டு வைக்காத ரஸ்ஸல் சிக்சர் விளாச கொல்கத்தா அணியின் ஸ்கோர் 200 ரன்களை தாண்டியது. அந்த அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன் குவித்தது. ரஸ்ஸல் 11 சிக்சர், 1 பவுண்டரி என 36 பந்தில் 88 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

யார் இந்த ரஸ்ஸல்: 

28 வயதான ஆந்த்ரே ரஸ்ஸல், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக இதுவரை 51 ஒருநாள் போட்டி, 43 டி20 போட்டிகள், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளார். வலதுகை பேட்டிங், வலதுகை விரைவுப் பந்துவீச்சாளருமான ரஸ்ஸல் 2011 ஆம் ஆண்டு அயர்லாந்திற்கு எதிராக நடைப்பெற்ற உலக கோப்பை போட்டியில் ஜமைக்கா அணியில் இடம்பெற்றார்.இதுவே ரஸ்ஸலின் முதல் மேட்ச்ஆகும். 2014 அம் ஆண்டு  ரஸ்ஸல் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். 

கடந்த  2015 ஆம் ஆண்டு நடைப்பெற்ற  ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய  ஆந்த்ரே ரஸ்ஸல் முக்கியமான 19 பந்து அரைசதம் கண்டார்.  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடிய அந்த ஆட்டத்தில்,  ஆந்த்ரே ரஸ்ஸல் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் போட்டியை கொல்கத்தா பக்கம் திருப்பிது இன்று வரை அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஊக்க மருந்து விவகாரத்தில், ரஸ்ஸலு ஓராண்டு தடை விதித்திக்கப்பட்டது. இந்த தடைக்கு பின்னர்,  ரஸ்ஸல் இந்தியாவில் நடைபெறும்  ஐபிஎல் 2018- மீண்டும் கொல்கத்தா அணிக்காக களம் இறங்கியுள்ளார்.   8.5 கோடிக்கு ரஸ்ஸலை  கொல்கத்தா அணி  இந்த முறையும் தக்கா வைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

203 எடுத்தால் வெற்றி இலக்குடன், ஒரு வழியா  சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கை துவக்கியது. ’நாங்களும் மதுரைக்காரங்க தாண்டா” என்பது போல் களத்தில் இறங்கினார்கள் வாட்சனும் ராயுடுவும்.  அதிரடி ஆட்டத்தை துவக்கிய  இந்த ஜோடி, முதலில் இருந்தே  சிக்சரும், பவுண்டரியுமாக விளாசினர். 23 பந்தில், 56 ரன்கள் விளாசிய சாம் பில்லிங்க்ஸ்  நேற்று ஒரு நாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு  கேப்டன் போலவே காட்சியளித்தார், மிடுக்கான தோற்றத்துடன், கொல்கத்தா அணி வீரர்களின் சுழல் பந்தைகள் அசால்ட்டாக சமாளித்தார். 23 பந்துகளில் 5 சிக்சர், 2 பவுண்டரியுடன் 56 ரனில் அவர்  விடைப்பெற்றார்.

யார் இந்த சாம் பில்லிங்க்ஸ்:

26 வயதாகும் பில்லிங்க்ஸ்  இங்கிலாந்து அணி வீரர் ஆவர். இடது கை பேட்டிங் பழக்கம் உடைய பில்லிங்ஸ்,  கடந்த 2015 ஆம் ஆண்டு  நடைப்பெற்ற ஒருநாள் போட்டியில் முதன்முதலில் ஆடினார்.  40 க்கும் மேற்பட்ட  ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும்   T20 போட்டிகளில் விளையாடி  அவர் முதலிடத்தைப் பிடித்தார்.  கடந்த 2016 ஆம் ஆண்டு, சிட்டகொங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த சர்வதேச ஒருநாள் தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், பில்லிங்க்ஸ் அரைசதம் அந்த தொடரையே இங்கிலாந்து அணிக்கு கைப்பற்றியதற்கு காரணமாக அமைந்தது. 

சாம் பில்லிங்க்ஸ் இதுவரை ஐபிஎல் தொடரில்  டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் விளையாடி வந்தார். ஐபிஎல் 2018 -ல் அவரை அந்த அணி தக்க வைத்துக் கொள்ளவில்லை. அதன் பின்பு,  சொட்ச மிச்சமாக 1 கோடி ரூபாய் அடிப்படை விலை’ என நிர்ணயம் செய்யப்பட்ட சாம் பில்லிங்ஸை, அதே 1 கோடி ரூபாய்க்கு ஏலத்தின் இறுதியில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கடந்த வாரம்  மும்பைக்கு எதிரான போட்டியில்  சென்னை சூப்பர் கிங்கிஸ் அணியில் விளையாடிய  ஜாதவிற்கு அடிப்பட்டது. இதனால் அந்த போட்டியில் இருந்து அவர்  பாதியில் விலகினார். தற்போது ஜாதாவிற்கு  பதிலாக  ஆல்ரவுண்டரான  சாம் பில்லிங்ஸ்  சென்னை அணியில் சேர்க்கப்பட்டார்.  நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாடிய  ஆட்டம் தான் பில்லிங்ஸ் சென்னை அணிக்கு முதன்முதலில் விளையாடியது ஆகும். முதல் ஆட்டமே அதிரடியாக அமைந்து, பில்லிங்ஸ் ஆட்ட நாயகன் விருதை சொந்தமாக்கினார். 

கொல்கத்தா அணிக்கு எதிராக 2016-ம் ஆண்டிலும் இதேபோல் ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார் பில்லிங்ஸ். டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடிய பில்லிங்ஸ், அப்போது 34 பந்துகளில் 54 ரன்கள் அடித்து அசத்தியவர். 

இதுக்குறித்து  பில்லிங்கஸ்  பேசியதாவது, “ ரெய்னா, தோனி, ஹர்பஜன் போன்ற திறமை வாய்ந்த வீரர்களோடு விளையாடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. மைக் ஹஸ்ஸியின் பேட்டிங் ஆலோசனை எனக்கு மிகவும் உதவியது.இவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டே இருக்கிறேன். எங்களது அணியின் பேட்டிங் ஆர்டர் பலமாக இருக்கிறது. அதுவே எங்கள் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது” என்று கூறினார்.

 

இறுதி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. பிராவோவும், ஜடேஜாவும் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.  கடைசியாக ஜடேஜா அடித்த சிக்சர் அவர் முன்பு செய்த அத்தனை தவறையும் மறக்க வைத்தது.பின்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில்  த்ரீல் வெற்றி பெற்றது.

200 ரன்களை சென்னை அணி சேஸ் செய்த போட்டிகளில் இரண்டிலும் கடைசி ஓவரை வீசியது வினய் குமார் என்பது குறிப்பிடத்தக்கது. 2012ல் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடனான போட்டியில் வினய் குமார் வீசிய பந்தில் பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தது ஜடேஜா தான் என்பதும், இன்றைய போட்டியில் கடைசி ஓவரை வீசிய வினய் குமாரின் பந்தில் சிக்ஸ் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்ததும் ஜடேஜாதான் என்பதும் சுவாரஸ்சிய தகவல்.

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Ipl 2018 chennai super kings beats kkr

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X