11வது ஐபிஎல் தொடர் இன்று கோலாகலமாக தொடங்கியது. பாலிவுட் நட்சத்திரங்களின் கண்கவர் நடனங்களுடன் ஐபிஎல் திருவிழா தொடங்கியது. முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான நடப்பு சாம்பியன்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில், சென்னை அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிப் பெற்றது.
டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி, பவுலிங்கை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 43 ரன்களும், இஷான் கிஷன் 40 ரன்களும் எடுத்தனர். சென்னை அணியில் வாட்சன் 4 ஓவர்கள் வீசி, 29 ரன்கள் விட்டுக் கொடுத்து, 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி, ஒரு கட்டத்தில் 118 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் இருந்தது. ஆனால், பிராவோ கடைசிக் கட்டத்தில் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் விளாசி 30 பந்துகளில் 60 ரன்கள் குவித்து 18வது ஓவரின் கடைசி பந்தில் அவுட்டானார்.
கையில் ஒரு விக்கெட் மட்டும் மீதமிருந்த நிலையில், ஏற்கனவே காயம் காரணமாக களத்தின் வெளியே இருந்த கேதர் ஜாதவ் மீண்டும் பேட் செய்ய வந்தார். இறுதி ஓவரில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஒரு சிக்சர், பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.
கடைசி மூன்று ஓவரில் மட்டும் சென்னை அணி 50 ரன்கள் விளாசி திரில் வெற்றிப் பெற்றது.
சிறப்பு கட்டுரை: இது முதல் போட்டியா இல்ல இறுதிப் போட்டியா? அதிர வைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்!