IPL 2020, CSK Tamil News: மற்ற சீசன்களை விட இந்த ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் சோகமாகவே தொடங்கியது எனலாம். துவக்கத்தில் எப்போதும் போலக் கலக்கலாக ஆரம்பித்தது. குறிப்பாக மற்ற அணிகள் எல்லாம் கொரோனாவை காரணம் காட்டி வீட்டுக்குள் முடங்கியிருக்க, சென்னை வீரர்கள் துடிப்புடன் சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்கினர். ஆனால் இதுவே பின்னால் வினையாகியது. சென்னையில் நடந்த பயிற்சியினால், தீபக் சஹர், ருதுராஜ் கெய்க்வாட் என இரண்டு வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
இதுஒரு புறம் இருக்க, மறுபுறம் சென்னை அணியின் நம்பிக்கை தூண்களான ரெய்னா மற்றும் ஹர்பஜன் அடுத்தடுத்து தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த சீசனில் விளையாட முடியவில்லை என்று அறிவித்தனர். இதிலிருந்து மீண்டு தற்போது அணி ரெடியாக இருக்கிறது. நாளை மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளவிருக்கிறது. ஆனால் இப்போதுதான் சிக்கலே. அப்படி என்ன சிக்கல் என்கிறீர்களா... ரெய்னா, ஹர்பஜன் இடத்தில் யாரை களமிறக்குவது.. பிளேயிங் லெவனில் எந்த 11 பேரை களமிறக்குவது என்பது தான் அந்த சிக்கல்.
IPL 2020, CSK Playing 11: ரெய்னா இடத்தில் யார்?!
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்து 34 நாள்களுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் களம் புகவிருக்கும் தோனி அனைத்தையும் பார்த்துக்கொள்வார் என்று விரேந்தர் சேவாக் கூறியது போல், ``சி.எஸ்.கேவை மூன்று முறை சாம்பியன் மற்றும் எட்டு முறை இறுதிப் போட்டிகளுக்கு அழைத்துச் சென்ற சென்னையின் சொந்த “தல” தோனியை விட ஐபிஎல் போட்டியையும் வீரர்களையும் யாரும் அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ள முடியாது. என்றாலும், இது தோனிக்கு சற்று அறிமுகமில்லாத சூழலில் நடக்கிற புதிய போட்டி. சென்னையின் சொந்த மண் சேப்பாக்கத்தில் இல்லாமல், அவரின் வலது கரமாக இருந்த ரெய்னா இல்லாமல் நடக்கவிருக்கும் போட்டி. ஆதாலால் இந்தப் போட்டியில் விளையாடுபவர்கள் பற்றி நிச்சயம் கணிப்பு செய்ய வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே இருக்கிறது.
ஐபிஎல் வரலாற்றில் ரெய்னாவை தவிர்க்கவே முடியாது. அதற்கான காரணத்தை அவரின் சராசரியும், அரைசதங்களுமே சொல்லும். அப்படிபட்ட நபர் 10 சீசன்களாக விளையாடிய நம்பர் 3 பேட்டிங் வரிசையை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் மாற்றி ஆக வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே இருக்கிறது. அதன்படி, ரெய்னாவின் இடத்தில் அம்பதி ராயுடு களமிறங்கவே அதிக வாய்ப்புள்ளது. ராயுடுவுக்கு
ரெய்னாவை போலவே மூன்றாவது இடத்தில் இறங்கி விளையாடிய அனுபவம் நிறையவே இருக்கிறது. அவரின் பேட்டிங் திறமையையும் சொல்லி தெரியவேண்டியதில்லை. 2018ல் ராயுடு சென்னை அணிக்காக ஆடியதே அதற்கு சான்று. ஒருவேளை தோனியின் வேறு மாதிரியாக இருந்து, அம்பதி ராயுடு மற்றும் ஷேன் வாட்சன்ஓப்பனிங் இறக்கப்பட்டால், ஃபாஃப் டு பிளெசிஸ் ரெய்னாவின் இடத்தில் இறக்கப்படலாம். ஆனால் கடந்த சில சீசன்களில் டு பிளெசிஸ் ஓப்பனிங் இறங்கி விளையாடி தன்னை நிரூபித்ததால் அவரே ஓப்பனிங் இறங்க அதிக வாய்ப்புண்டு. இதற்கிடையே, முரளி விஜய் ஓப்பனிங் இறக்கப்பட்டால் இதில் அனைத்துமே மாறும்.
3ம் இடம் இப்படி இருக்க, 4வது இடத்துக்கு கேப்டன் தோனியை தவிர்த்து வேறு சாய்ஸ் இருக்க முடியாது. பல சந்தர்ப்பங்களில், 4 வது இடத்தில் விளையாடி அணியை உயர்த்திக் காட்டியவர் தோனி என்பதால் அந்த இடத்துக்கு சந்தேகமே வேண்டாம். அடுத்து கேதார் ஜாதவ் 5-வது இடத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டுவைன் பிராவோ மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முறையே 6 மற்றும் 7 இடங்களில் விளையாட வாய்ப்பு இருக்கிறது. சென்னை சேப்பாக்கம் போன்று துபாய் ஆடுகளங்களும், மந்தமான ஆடுகளங்களாக இருப்பதால், இதே லைன் அப்பில் விளையாடவே அதிக வாய்ப்பு இருக்கிறது.
பௌலிங் யூனிட் எப்படி?!
சி.எஸ்.கேவின் பலமே அதன் ஸ்பின் யூனிட் தான். ஆனால் இந்த முறை ஹர்பஜன் வேறு இல்லை. என்றாலும், அதை குறித்து கவலை கொள்ள தேவையில்லை. மிட்செல் சாண்ட்னர், பியூஷ் சாவ்லா, ரவீந்திர ஜடேஜா, இம்ரான் தாஹீர் என ஒருபடையே இருக்கிறது. பாஸ்ட் பௌலிங்கை பொறுத்தவரை, லுங்கி நெகிடி, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ஹேசில்வுட் இவர்களோடு இப்போது சாம் குர்ரானும் அணியுடன் இணையவிருக்கிறார். எனினும் இவர்களில் தோனியின் சாய்ஸாக முதலில் இருப்பவர்கள் லுங்கி நெகிடி மற்றும் தீபக் சாஹர் ஆகியோர். சமீபத்தில் கொரோனாவில் இருந்து மீண்ட காரணத்தினால் தீபக் சாஹர் விளையாட முடியாமல் போனால் ஹேசில்வுட் அல்லது ஷர்துல் களம் காண வாய்ப்பு இருக்கிறது.
சாம் குர்ரான் கட்டாய தனிமைப்படுத்தலுக்குப் பிறகு விளையாட தகுதியானவுடன், அவர் அணியில் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது. பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் அவர் கலக்கி வந்துள்ளார் அதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இவை எல்லாமே தோனியின் கைகளில் தான் இருக்கிறது.
என்ன நடக்கிறது என்பதை அறிய நாளை இரவு வரை காத்திருங்கள்...!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.