ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்தடுத்து 2 போட்டிகளில் தோல்வியில் துவண்டிருந்த நிலையில், பஞ்சாப் அணியை வெற்றிகொண்டு மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியது. ஆனால், எல்லாப் போட்டிகளிலும் கலக்கிய டு பிளஸிஸ் காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் சி.எஸ்.கே.வுக்கு தீராத சோகம் காலை சுற்றி வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சுறுத்லை எல்லாம் தாண்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் துபாயிலும் ஐபிஎல் 2020 போட்டிகள் வெற்றிகரமாக நடந்து வருகிறது. ஐபிஎல் தொடர் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பே சி.எஸ்.கே அணிக்கு சிக்கல் மேல் சிக்கல் வந்து விழுந்தது. துபாய் சென்ற சி.எஸ்.கே பந்து வீச்சாளர் உட்படம் 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஒருவழியாக அவர்கள் தொற்றில் இருந்து மீண்டார்கள்.
அதற்கு அடுத்து, அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதே போல, சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் தொடரில் இருந்து விலகினார். அப்போதே, ரெய்னாவின் இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்வி எழுந்தது.
இதையெல்லாம், தாண்டி சி.எஸ்.கே முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிக் கணக்கைத் தொடங்கியது. ஆனால், சி.எஸ்.கே அடுத்தடுத்து 2 போட்டிகளில் தோல்வியைத் தழுவியது. இந்த 2 போட்டிகளிலும் தொடக்க வீரர் வாட்சன் சிறப்பாக விளையாடவில்லை. மற்றொரு வீரர் கேதார் ஜாதவ் ஆகியோர் சரியாக விளையாடவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், சி.எஸ்.கே-வின் எல்லா போட்டிகளிலும் ஒன் மேன் ஆர்மியாக சிறப்பாக விளையாடியவர் டு பிளசிஸ். சி.எஸ்.கே தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வியடைந்ததால் கேப்டன் தோனி மீது அழுத்தம் அதிகரித்தது. அங்கிள்ஸ் டீம் என்ற விமர்சனம் அதிகமாக எழுந்தது.
இந்த நிலையில்தான், 4வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் உடன் மோதிய சி.எஸ்.கே அபார வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியது. இந்த போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாம் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. ஆனால், சி.எஸ்.கே-வில் தொடக்க வீரர்களான வாட்சனும் டு பிளசிஸும் மட்டுமே நிலைத்து நின்று அதிரடியாக விளையாடி 181 ரன்கள் அடித்து வெற்றியை ஈட்டினர். இந்த போட்டியில் டு பிளசிஸ் 53 பந்துகளுக்கு 87 ரன்னும் வாட்சன் 53 பந்துகளில் 83 ரன்னும் அடித்திருந்தனர். வாட்சன், இந்த போட்டியில் தனது வழக்கமான அதிரடியை காட்டி தனது மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.
சென்னை அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பிவிட்டது என்று சி.எஸ்.கே ஆதரவு ரசிகர்கள் எல்லாம் மகிழ்ச்சியில் இருந்த நிலையில், சி.எஸ்.கேவுக்கு தீராத சோகமாக டு பிளசிஸ் காலில் காயம் அடைந்துள்ளார்.
எல்லா போட்டிகளிலும் தனது பேட்டிங் மூலம் தூக்கி நிறுத்திய டு பிளசிஸ் கடந்த 2 போட்டிகளாக வேகமாக ஓட முடியாமல் சிரமப்பட்டதைப் பார்க்க முடிந்தது. அதனால், தான் அவர் ஒரு போட்டியில் ரன் அவுட்டும் ஆனார். டு பிளசிஸ் முட்டியில் ஏற்பட்ட காயத்தால் காலில் ஐஸ் பேக் கட்டிக்கொண்டு இருந்த புகைப்படங்கள் வெளியானது. இதனால், டு பிளசிஸ் அடுத்து வரும் போட்டிகளில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
டு பிளசிஸ்க்கு பெரிய அளவில் காயம் ஏற்பட்டுவிட்டதா என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. டு பிளஸிஸ் காயம் பற்றி சி.எஸ்.கே அணி நிர்வாகம் இன்னும் எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஒருவேளை காயம் காரணமாக டுபிளசிஸ் விளையாடவில்லை என்றால், சி.எஸ்.கே பேட்டிங் வரிசையில் பெரிய பின்னடைவு ஏற்படும். அதனால், இப்போது தோனிக்கு மேலும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. டு பிளசிஸ் இடத்தில் யாரை விளையாட வைப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.