இன்றைய ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றிகண்ட உற்சாகத்தில் சென்னை அணி களமிறங்குகிறது. ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு இது தான் இந்த சீஸனின் முதல் போட்டி. சென்னை அணி தனது பலத்தை முதல் போட்டியிலேயே காண்பித்துள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
சத்தமில்லாமல் சாதிக்கும் ராயல்ஸ்!
ஐபிஎல் அணிகளிலேயே வித்தியாசமானது ராஜஸ்தான் ராயல்ஸ்தான். எப்போது வீறுகொண்டு எழும், எப்போது விழும் என்பது அந்த அணிக்கே தெரியாது. இளம் வீரர்களை அதிகம் கொண்டிருந்தாலும், அணி நிர்வாகம் நம்பியிருப்பது என்னவோ இங்கிலாந்து ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு வீரர்களைத் தான். ஆனால் அதுவே அந்த அணிக்கு பெரும்பாலும் சிக்கலாக அமைந்துவிடுகிறது. பல முறை இந்த வீரர்கள் தங்கள் சொந்த நாட்டு அணிக்காக விளையாட சென்றுவிடுவதால், அணி பலம் குறைந்ததாக மாறிவிடுகிறது. இந்த சீஸனும் அதேபோலான நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறதா என்றால் கிட்டத்தட்ட ஆம் என்பதுதான் பதில்.
ராஜஸ்தான் ராயல்ஸ், இன்று தனது தொடக்க ஆட்டத்தில் வலிமைமிக்க சென்னை சூப்பர் கிங்ஸை ஷார்ஜா மைதானத்தில் எதிர்கொள்கிறது. ராயல்ஸ் அணியின் முக்கியமான வீரர் பென் ஸ்டோக்ஸ் இந்த முறை இல்லை. ஸ்டோக்ஸின் தந்தைக்கு மூளை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தந்தையின் சிகிச்சையின்போது அருகில் இருப்பதற்காக இங்கிலாந்தில் இருந்து நியூசிலாந்து சென்றுள்ளார். இதனால் அவர் இந்தத் தொடரின் முதல் பகுதி வரை கலந்துகொள்வது சந்தேகம்தான். இதேபோல் இன்னொரு நட்சத்திர வீரரான, தொடக்க வீரர் ஜோஸ் பட்லர், கட்டாய தனிமைப்படுத்துதல் காரணமாக இன்றைய ஆட்டத்தில் பங்கேற்க முடியாது.
இவர்கள் மட்டுமில்லை, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் காயத்தால் அவதிப்பட்ட வருகிறார். இதனால் அவர் பங்கேற்பதும் முதலில் சந்தேகம் தான் எனக் கூறப்பட்டது. ஆனால் தற்போது ஸ்மித் காயத்தில் இருந்து மீண்டு விட்டதால் அவர் பங்கேற்பார் என்று கூறப்பட்டுள்ளது. இதுதான் ஒரே ஆறுதல் விஷயம். பிளே ஆப்ஸ் வரை ராஜஸ்தான் அணியை வலுவுடன் வைத்திருக்க வெளிநாட்டு வீரர்களை சார்ந்தே இருக்க வேண்டிய நிலைமை. ஏனெனில் அந்த அணியில் உள்ள இந்திய வீரர்கள் பெரிய அளவில் நம்பிக்கையை பெறவில்லை என்பதே உண்மை. சஞ்சு சாம்சன், ராபின் உத்தப்பா, ஜெய்தேவ் உனட்கட் மற்றும் வருண் ஆரோன் போன்றவர்கள் இருந்தாலும், பல ஆண்டுகளாக அவர்கள் அணியின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அதனால் இந்த முறை அதனை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் மற்றும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ டை, இங்கிலாந்து வீரர் டாம் கர்ரன் ஆகியோர் அந்த அணிக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய வீரர்களாக உள்ளனர். அவர்களுடன் ஜோஃப்ரா ஆர்ச்சர் சேரும்போது கூடுதல் பலம் இருக்கும். இன்றைய போட்டியில் பட்லர் மற்றும் ஸ்டோக்சுக்கு பதிலாக டாம் கர்ரன் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம், சி.எஸ்.கேவை பொறுத்தவரை, தொடக்க ஆட்டத்தை போலவே நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். ராயுடு-டூபிளெஸ்ஸிஸ் கூட்டணி இன்றும் சிறப்பான ஆட்டத்தை தொடர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டுவைன் பிராவோ காயம் காரணமாக தவற விடும் இடத்தை சாம் குர்ரன் ஒரு ஆல்ரவுண்ட்ராக கடந்த போட்டியில் பூர்த்தி செய்தார். இன்றும், அதை பூர்த்தி செய்தால் சிறப்பு.
பந்துவீச்சை பொறுத்தவரை பியூஷ் சாவ்லா கூடுதல் பலம். மும்பை உடனான ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஃபீல்டிங்கில் தீபக் சாஹா் தடுமாறினார். இது அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனை சரிசெய்யத் தவறினால் ஒருவேளை அவருக்குப் பதிலாக ஷா்துல் இடம்பெறலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.