ஐபிஎல் முழுவதும் நிறைய விஷயங்களைப் பற்றி பேசப் போகிறோம்
இந்த கொரோனாவால் என்ன நன்மை நடந்தது என்று தெரியாது. ஆனால், மூலை முடுக்கெங்கும் யூடியூப் சேனல் திறக்கப்பட்டிருக்கிறது. கடைநிலை பப்ளிக் முதல் பிரபலங்கள் வரை வகை வகையாக, ரகம் ரகமாக யூடியூப் சேனல் தொடங்கி, சப்ஸ்கிரைப் பண்ணுங்க, பெல் பட்டன் அமுக்குங்க என்று நம்மை போர்வை போர்த்தி அமுக்கி சொல்லாத குறையாக ஒப்பித்து வருகின்றனர்.
Advertisment
இந்த லிஸ்டில் அண்மையில் இணைந்தவர் கிரிக்கெட்டர் ரவிச்சந்திரன் அஷ்வின். சென்னையில் லாக் டவுனில் இருந்த போதே, யூடியூப் சேனல் தொடங்கியவர், பிரபலங்களை அழைத்து கேள்வி கேட்டு வந்தார். இப்போது ஐபிஎல்-லுக்காக துபாய் சென்றிருப்பதால், அங்கும் சென்று கடை விரித்துவிட்டார். அதுவும், போர்டு வைத்து, பெயரெல்லாம் வைத்து திறப்பு விழா நடத்தியிருக்கிறார்.
Hello Dubaiahh? எனும் பெயரில், முதல் எபிசோடை இன்று தொடங்கியிருக்கிறார்.
இதில், சென்னையில் இருந்து துபாய்க்கு எப்படியெல்லாம் அழைத்து வரப்பட்டார் என்ற பூரா கதையையும் சொல்லியிருக்கிறார். உண்மையில், ரசிகர்களுக்கு இது நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கும். ஏனெனில், வெளியே தெரியாத பல விஷயங்களை அவர் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
இந்த முதல் எபிசோடில் அவர் சென்னையில் இருந்து வந்தது எப்படி? அணி நிர்வாகம் எப்படி அழைத்து வந்தது? என்பதெல்லாம், சத்தியமாக நமக்கு என்றும் தெரியப்போவதில்லை. ஆனால், இந்த டாபிக்கை அவர் சொல்லும் போது, அம்புலி மாமா கதை சொல்வது போல், நமக்கே ஆர்வமாக உள்ளது.
அவர் கூறுகிறார், 'சென்னையில் எனது வீட்டிலேயே நான்கு முறை கொரோனா சோதனை செய்து, அது நெகட்டிவ் என்று வந்த பிறகு தான், என்னை ஐபிஎல்-ல் கலந்து கொள்ளவே அனுமதித்தனர். எனினும், சென்னையில் இருந்து நான் நேரடியாக துபாய் வர முடியாது என்று கூறிவிட்டார்கள். மும்பை வந்து, அங்கிருந்து Chartered Flight-ல் டெல்லி கேபிட்டல்ஸ் அணியுடன் சென்றுவிடலாம் என்று கூறினார்கள். எனவே நான் மும்பை சென்றேன். அங்கு என்னை இரண்டு நாட்கள் தனிமைப்படுத்தினார்கள். பிறகு அங்கு ஒரு சோதனை நடத்தி, அதில் நெகட்டிவ் என்று வந்த பிறகு, டெல்லி அணியுடன் பயணித்து ஒருவழியாக துபாய் வந்து சேர்ந்தோம்" என்று கூறியுள்ளார்.
மேலும், ஐபிஎல் முழுவதும் நிறைய விஷயங்களைப் பற்றி பேசப் போகிறோம் என்றும் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil