ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இடையேயான போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், சி.எஸ்.கே தொடர் தோல்வியில் துவண்டு வருகிறது.
கடந்த கால ஐபிஎல் தொடர்களில், கலக்கி வந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, (சி.எஸ்.கே) தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. சி.எஸ்.கே அணி 6 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில், 7வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணியுடன் மோதியது. சி.எஸ்.கே-வில் தொடர்ந்து, மோசமாக விளையாடி வந்த கேதார் ஜாதவ்க்கு பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெகதீசன் சேர்க்கப்பட்டிருந்தார். அதனால், இந்த போட்டியில், வெற்றி பெறுமா என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் ரசிகர்கள் காத்திருந்தனர்.
ஐபிஎல் கிரிக்கெட் 2020 தொடரின் 25-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது.
ஆர்.சி.பி கேப்டன் விராட் கோலி, டாஸ் வென்றதையடுத்து, பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆர்.சி.பி அணி, சி.எஸ்.கே அணியின் பந்து வீச்சில் திணறியது. ஆரோன் பிஞ்ச் 2 ரன்னிலும், தேவ்தத் படிக்கல் 33 ரன்னிலும், டிவில்லியர்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும், வாஷிங்டன் சுந்தர் 10 ரன்னும் எடுத்து அவுட் ஆனார்கள்.
ஆனால், கேப்டன் கோலி மட்டும் நிலைத்து நின்று விளையாடி வந்தார். ஆர்.சி.பி 95 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறிக்கொண்டிருந்த நிலையில், 15வது ஓவருக்கு மேல், அதிரடியாக விளையாடிய, விராட் கோலி, 52 பந்துகளில், 90 ரன் அடித்தார். இதில், 4 சிக்சர் 4 பவுண்டரி அடங்கும். கோலியின் சிறப்பான பேட்டிங் உதவியால், ஆர்.சி.பி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்தது.
170 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சி.எஸ்.கே அணியின் தொடக்க வீரர்கள், டு பிளஸிஸ் 8 ரன்னிலும் ஷேன் வாட்சன் 14 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அடுத்து வந்த தமிழக வீரர் ஜெகதீசன், அம்பத்தி ராயுடு இருவரும் நிதானமாக விளையாடினார். ஜெகதீசன் 33 ரன் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த தோனியும் அவுட் ஆனார். அம்பத்தி ராயுடு 42 எடுத்து அவுட் ஆனார். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு சிஎஸ்கே 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், ஆர்.சி.பி 32 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடர் தோல்விகளை சந்தித்துவந்த சி.எஸ்.கே அணி இந்த போட்டியிலும் தோல்வியடைந்ததன் மூலம் இந்த ஐபிஎல் தொடரில் 5வது போட்டியில் தோல்வியை சந்தித்தது. தொடர் தோல்வியில் துவளும் சி.எஸ்.கே மீண்டெழுமா அல்லது போட்டியில் இருந்து வெளியேறுமா என்பது விரைவில் தெரியவரும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் திரில் வெற்றி
ஐபிஎல் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நேற்று மாலை அபுதாபியில் நடந்த 24-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்று, முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 164 ரன்கள் குவித்தது. இதில் அதிரடியாக விளையாடிய கேப்டன் தினேஷ் கார்த்திக் 29 பந்துகளீல் 58 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். மற்றொரு வீரர் சுப்மன் கில் 57 ரன் எடுத்தார்.
165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணி ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 162 ரன்களே எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. கே.கே.ஆர். அணியில் சுனில் நரின் கடைசி ஓவரை சிறப்பாக வீசி வெற்றிக்கு காரணமானார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"