IPL 2021 covid-19 Updates: இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், கடும் கட்டுப்பாடுகளுடன் 14வது ஐபிஎல் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தொற்று பரவலுக்கெதிராக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எடுக்கப்பட்டு இருந்தாலும், தொடரில் கலந்து கொண்டுள்ள வீரர்கள் சிலருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் தொற்று குறித்த அச்சத்தை வெளிப்படுத்திய சில வீரர்கள் தொடரில் இருந்து பின்வாங்கியுள்ளனர். அதோடு நாடும் முழுதும் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இப்படி ஒரு தேவைதானா? என சில முன்னணி வீரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அகமதாபாத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்ச்ஸ் பெங்களூரு அணிகள் மோதவிருந்த இன்றைய ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது. சென்னை அணியில் உள்ள வீரர்கள் மற்றும் நிர்வாக குழுவில் உள்ளவர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா சோதனையில், தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், பந்துவீச்சு பயிற்சியாளர் எல் பாலாஜி மற்றும் பேருந்து கிளீனர் ஆகிய மூவருக்கும் தொற்று உறுதி செயப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட உள்ளதாகவும், 2 கட்ட கொரோனா சோதனை முடிவுகளுக்கு பிறகே அணிக்கு திரும்புவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)