IPL 2021 CRICKET Tamil News: கடந்த ஏப்ரல் 9ம் தேதி முதல் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 14 வது சீசன், கொரோனா தொற்று காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், தொடரில் கலந்து கொண்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் தங்கள் சொந்த ஊர் நோக்கி புறப்பட துவங்கியுள்ளனர்.
இந்தியாவில் இருந்து செல்லும் விமானங்களுக்கு ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளதால், தொடரில் கலந்து கொண்டு, தற்போது சொந்த மண் திரும்பும் ஆஸ்திரேலிய வீரர்கள் மலாத்தீவு மற்றும் இலங்கையில் விமான நிலையங்களில் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில், டெல்லியில் தங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் வீடு சென்ற பின்னரே தான் தனது வீட்டிற்கு செல்வேன் என்று அந்த அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
விர்ச்சுவல் மீட்டிங்கில் பேசிய கேப்டன் தோனி, ‘இந்தியாவில் ஐபிஎல் நடப்பதால், வெளிநாட்டு வீரர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்கள் தங்கள் வீடுகளுக்கு முதலில் பயணம் செய்ய வேண்டும். பின்னர் உள்நாட்டு வீரர்கள் அவர்களது வீடு நோக்கி பயணப் படலாம்’ என்று கூறியுள்ளார்.
“ஹோட்டலை விட்டு வெளியேறும் கடைசி நபராக தான் இருக்க வேண்டும் என்று மஹிபாய் விரும்பினார். மேலும் வெளிநாட்டு வீரர்கள் முதலிலும், உள்நாட்டு வீரர்கள் பின்னரும் பயணத்தை துவங்கலாம் என்று தெரிவித்திருந்தார். எல்லோரும் தங்கள் வீட்டை பாதுகாப்புடன் அடையும் போது அவர் நாளை கடைசி விமானத்தில் சொந்த ஊர் செல்வார் ”என்று சிஎஸ்கே உறுப்பினர் ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு தெரிவித்தார்.
10 இருக்கைகளை கொண்ட சிறிய ரக விமானம் நேற்று டெல்லியில் இருந்து ராஜ்கோட் மற்றும் மும்பைக்கு சென்றது. தொடர்ந்து பெங்களூரு மற்றும் சென்னை வீரர்களை தரையிறக்கிய அந்த விமானத்தில் கேப்டன் தோனி கடைசியாக, ராஞ்சியில் உள்ள தனது வீட்டிற்கு பறக்க உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)