IPL 2021 cricket Tamil News: 14 வது ஐபிஎல் தொடர் வரும் 9ம் தேதி முதல் துவங்க உள்ள நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் தொடரின் முதல் போட்டி நடக்கவுள்ளது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதுகிறது. அதனைத் தொடர்ந்து 10ம் தேதி நடக்கும் 2வது போட்டியில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்த போட்டிக்காக இரு அணிகளும் மும்பை வான்கடே மைதானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் டெல்லி அணியின் கேப்டன் ஷேரேயஸ் ஐயர் தொடரில் இருந்து விலகியுள்ளார். எனவே அவருக்கு பதில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷாப் பந்த் கேப்டனாக செயல்பட உள்ளார்.
தொடரின் முதல் போட்டியிலே தனது வழிகாட்டியும், முன்னாள் கேப்டனுமான எம்.எஸ் தோனியை எதிர்கொள்ள உள்ளது தனக்கு நல்ல அனுபவத்தை தரும் என்றும், அவரிடம் கற்ற மொத்த வித்தைகளையும் பயன்படுத்துவேன் என்றும் ரிஷாப் பந்த் தெரிவித்துள்ளார்.
“கேப்டனாக எனது முதல் போட்டி மாஹி (எம்.எஸ். தோனி) பாய்க்கு எதிராக இருக்கும். அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டதால் இது எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். ஒரு வீரராக எனது சொந்த அனுபவத்தையும், எம்.எஸ். தோனியிடமிருந்து கற்ற வித்தைகளையும் நான் பயன்படுத்துவேன். மேலும் சி.எஸ்.கே-க்கு எதிராக வேறு ஏதாவது புதியதாக செய்ய முயற்சிப்பேன்” என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் ரிஷாப் பந்த் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்த சர்வதேச போட்டிகளில் ரிஷாப் பந்த் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் தனது பேட்டிங் ஸ்டைலில் மேம்படுத்தியும் இருந்தார். அவரின் சிறப்பான ஆட்டத்தால் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள நிலையில், முன்னாள் கேப்டன் தோனியுடன் பல நேரங்களில் ஒப்பீடு செய்து பார்க்கப்படுகிறார்.
இதுவரை 68 ஐபிஎல் போட்டிகளில் 2,079 ரன்கள் சேர்த்துள்ள பந்த், டெல்லி அணியை இந்த ஆண்டும் இறுதி போட்டிக்கு அழைத்துச் செல்ல கடினமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
“இந்த வாய்ப்பை அதிகம் பயன்படுத்த எதிர்பார்க்கிறேன். நாங்கள் இன்னும் ஒரு ஐபிஎல் பட்டம் கூட வெல்லவில்லை. இந்த ஆண்டு அதை பெற எனது நிலைக்கு சிறந்த முறையில் முயற்சிப்பேன். கடந்த இரண்டு-மூன்று ஆண்டுகளில் நாங்கள் ஒரு அணியாக சிறப்பாக விளையாடுகிறோம். எங்கள் ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.
அனைத்து வீரர்களும் நல்ல பார்மில் உள்ளனர். அவர்கள் எல்லோரும் தங்களது 100 சதவிகிதத்தை வழங்குவார்கள். அணியின் சூழலை பொறுத்தவரை அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளார்கள். அதுதான் ஒரு கேப்டனாக நீங்கள் விரும்புவது” என்று பந்த் கூறினார்.
அணியில் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் குறித்து கேட்டபோது, “அவர் (ரிக்கி) கடந்த இரண்டு-மூன்று ஆண்டுகளில் எங்களுக்கு மிகவும் சிறந்த பயிற்சியாளராக இருக்கிறார். அவரை அணியில் உள்ள வீரர்களுக்கு ஆற்றலைக் கொண்டுவருகிறார். மேலும் நீங்கள் நிறைய கற்றுக் கொள்ளக்கூடிய மனிதர் இவர்தான் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், பின்னர் அதை விட சிறந்தது எதுவுமில்லை. அவரின் முயற்சியோடும், முழு அணியின் உதவியுடன் இந்த ஆண்டு பட்டத்தை நாங்கள் வெல்வோம் என்று நம்புகிறோம்” என்று பந்த் தெரிவித்துள்ளார்.
📹 | @RishabhPant17 brought a lot of positive energy to his first interview as captain 🤩
— Delhi Capitals (@DelhiCapitals) April 6, 2021
P.S. #RP17 is all set for the first game against mentor and friend, @msdhoni 💙💛#YehHaiNayiDilli #DCAllAccess @OctaFX pic.twitter.com/D3zrquEf1C
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” ( https://t.me/ietamil )