IPL 2021 final CSK VS KKR Tamil News: நடப்பு சீசனில் புள்ளி பட்டியலில் 18 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்த சென்னை அணி 20 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்த டெல்லியை அணியை இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் டெல்லியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணி 9-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது.
இதேபோல், புதன் கிழமை நடந்த 2வது தகுதி சுற்றில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
4-வது முறையாக வாகை சூடுமா சென்னை அணி?
ஐபில் கிரிக்கெட் தொடரில் இதுவரை 8 முறை (2008, 2010, 2011, 2012, 2013, 2015, 2018, 2019) இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ள சென்னை அணி அதில் 3 முறை (2010, 2011, 2018) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. சென்னை அணியில் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் (603 ரன்) பேட்டிங்கில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் நாளைய ஆட்டத்தில் 24 ரன்கள் சேர்க்கும் பட்சத்தில், அதிக ரன்களை குவித்த வீரருக்கான ஆரஞ்சு நிற தொப்பியை லோகேஷ் ராகுலிடம் (626 ரன்) இருந்து தட்டிப்பறித்து விடுவார்.
Drill 🔛 🦁#WhistlePodu #Yellove 💛 pic.twitter.com/SloAMQybWf
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) October 13, 2021
தற்போது வரை விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை அணியில் கேப்டன் தோனி (40), டுவைன் பிராவோ (38), ஃபாஃப் டு ப்ளெசிஸ் (37), அம்பதி ராயுடு (36), ராபின் உத்தப்பா (36), மொயீன் அலி (34) மற்றும் ரவீந்திர ஜடேஜா (32) என அனுபவ வீரர்களுக்கு பஞ்சமில்லாத ஒரு அணியாக உள்ளது. எனவே, அந்த அணி கொல்கத்தா அணியின் உத்திகளை முறியடித்து கோப்பையை உச்சிமுகரவே முனைப்பு காட்டும்.
பந்து வீச்சில் ஜோஷ் ஹேசில்வுட், தீபக் சாஹர் மற்றும் ஷர்துல் தாக்கூர் போன்ற மூன்று நடுத்தர அளவிலான அனுபவம் வாய்ந்த சர்வதேச வீரர்கள் வலு சேர்க்கிறார்கள்.
3வது முறை பட்டம் வெல்லுமா கொல்கத்தா?
2 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய (2012, 2014) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 முறையும் சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது. தற்போது அந்த அணி 3-வது பட்டத்துக்கு குறி வைத்துள்ளது. பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் சமபலத்துடன் உள்ளது போல் தென்படும் கொல்கத்தா அணியில் கேப்டன் இயான் மோர்கன் பேட்டிங்கில் சோபிக்கவில்லை என்றாலும், அணியை மிகவும் சிறப்பாகவே வழிநடத்தி வருகிறார். குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 7 ஆட்டங்களில் 2ல் தோல்வியை தழுவி அந்த அணி மற்ற 5 ஆட்டங்களிலும் வெற்றியை ருசித்தது.
கேப்டன் தோனியை போன்றே மைதானத்தில் சாதுரியமாக திட்டம் வகுக்கும் ஒரு கேப்டனாகவே இயான் மோர்கன் செயல்படுகிறார். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வெங்கடேஷ் ஐயர் - சுப்மன் கில் ஜோடிக்கு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறார்.
Moments immortalised by brilliant performances! 😍#KKRvDC in 📸#KKR #AmiKKR #KorboLorboJeetbo #আমিKKR #IPL2021 pic.twitter.com/6d3UctMaGq
— KolkataKnightRiders (@KKRiders) October 14, 2021
சுழலில் சிக்க வைக்கும் கொல்கத்தாவின் மும்மூர்த்திகள்
கொல்கத்தா அணியின் பலமே அந்த அணியின் பந்துவீச்சு தான். சென்னை அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் செல்ல முட்டுக்கட்டையாக அந்த அணியின் சுழல் மும்மூர்த்திகள் இருப்பர். இதில் வருண் சக்கரவர்த்தி 6.40 என்ற எக்கனாமி ரேட்டுடனும், ஷகிப் அல் ஹசன் 6.64 எனவும், மற்றும் சுனில் நரைன் 6.44 என்றும் இருந்து மிரட்டுகின்றனர். இந்த மும்மூர்த்திகள் வீசும் 12 ஓவர்களை சென்னை அணி தும்சம் செய்தால் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.
கொல்கத்தா அணி ஏற்கனவே நடந்த லீக் சுற்றின் 2 ஆட்டங்களில் சென்னை அணியினிடம் தோல்வி கண்டது. எனவே, அதற்கு பழிதீர்க்கும் முனைப்புடன் காத்திருக்கிறது. இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.