சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அணி வீரர் மொயீன் அலி சி.எஸ்.கே ஜெர்ஸியில் மதுபானம் தயாரிக்கும் நிறுவனத்தின் பிராண்ட் அடையாளம் இடம் பெறுவதை மறுத்துள்ளார். இதன் மூலம், சி.எஸ்.கே அணி ஜெர்ஸியையே மாற்றியுள்ளது. மோயீன் அலியின் இந்த கொள்கையை ரசிகர்கள் அனைவரும் கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது என்று பாராட்டி வருகின்றனர்
மோயீன் அலி இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர். ஆல் ரவுண்டரான மொயீன் அலி பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதனால், ஏப்ரல் 10ம் தேதி மும்பை வாங்கடே மைதானத்தில் ஐபிஎல் போட்டி 2021 சீசன் தொடங்குகிறது. இதற்கு முன்னதாக, பிப்ரவரி மாதம் நடந்த ஐபிஎல் 2021 ஏலத்தில் 33 வயதான மோயீன் அலியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.7 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதற்கு முன்பு அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இருந்தார். 2018ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 சீசன்களில் அந்த அணியில் விளையாடுகிறார். ஐபிஎல் 2021ம் ஆண்டு சீசன் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடுகிறார்.
இந்த சூழலில்தான், மோயீன் அலி அணிகிற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்ஸி வழியாக ஒரு சிக்கல் வந்துள்ளது. அது என்னவென்றால், மொயீன் அலி மத நம்பிக்கையால் ஒரு முஸ்லிம், அவருடைய மத நம்பிக்கைப்படி மது அருந்துவது, மதுவை ஊக்குவிப்பது பாவம்.
மொயீன் அலி தான் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜெர்சியில் எஸ்.என்.ஜே 10000 சின்னம் உள்ளது. இது சென்னையச் சேர்ந்த எஸ்.என்.ஜே டிஸ்டில்லரிகளின் (மதுபானம்) தயாரிப்பு பிராண்டாகும். அதனால், தனது கொள்கைப்படி, சிஎஸ்கே ஜெர்சியில் மதுபானம் தயாரிப்பு நிறுவனத்தின் பிராண்ட் உள்ளதால் அதை அணிய மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். மொயீன் அலியின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை புரிந்துகொண்ட, சிஎஸ்கே நிர்வாகம் மொயீன் அலி கோரிக்கைக்கு ஒப்புக் கொண்டு, அவரது ஜெர்சியிலிருந்து மதுபான தயாரிப்பு நிறுவன லோகோவை நீக்கியுள்ளது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் நீறுபூத்த நெருப்பாக உள்ள நிலையில், மதுபான தயாரிப்பு நிறுவனத்தின் லோகோகூட தனது ஜெர்சியில் இருக்கக் கூடாது என்ற மொயீன் அலியின் கொள்கையை ரசிகர்கள் பலரும் கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது என்று பாராட்டியுள்ளனர்.
மொயீன் அலி இதுவரை 19 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 309 ரன்கள் எடுத்துள்ளார். 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த ஐபிஎல் சிஎஸ்கேவில் இந்தியாவின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் தலைமையில் விளையாடுவதில் ஆர்வமாக உள்ளது என்று கூறினார்.
“தோனி தலைமையின் கீழ் விளையாடிய வீரர்களுடன் நான் பேசியுள்ளேன். அவர் தனது விளையாட்டை எவ்வாறு மேம்படுத்துகிறார் என்று அவர்கள் என்னிடம் கூறுகிறார்கள். ஒரு சிறந்த கேப்டன் அதைச் செய்வார் என்று நான் நம்புகிறேன்” என்று மொயீன் அலி கூறியதாக சிஎஸ்கே தளம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், “தோனியின் இன் கீழ் விளையாடுவது ஒவ்வொரு வீரரின் விருப்பமாக உள்ளது என்று நான் நினைக்கிறேன். அவர் வீரர்களுக்கு அளிக்கும் நம்பிக்கையும் தெளிவும் இது என்று நான் நினைக்கிறேன்.” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.