IPL 2021 playoffs Tamil News: இந்திய மண்ணில் நடைபெற்று வந்த நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கொரோனா பெருந்தொற்று அச்சத்தால் தற்காலிமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது ஐக்கிய அரபு அமீரத்தில் மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிளைமாக்ஸை எட்டவுள்ள இந்த தொடரில் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
இந்த பிளேஆஃப் ரேஸில் ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் தகுதி பெற்றுவிட்ட நிலையில் தற்போது நான்காவதாக தகுதி பெற உள்ள அணி எது என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், இந்த 4வது இடத்திற்கான ரேஸில் கொல்கத்தா, மும்பை, ராஜஸ்தான், மற்றும் பஞ்சாப் ஆகிய நன்கு அணிகள் உள்ளன. இதில் எந்த அணி அந்த 4வது இடத்திற்கு முன்னேறும்? முதல் மூன்று இடத்தில் உள்ள அந்த அணிகள் அந்த இடங்களை தக்கவைத்துக்கொள்ளுமா? என்பது போன்ற கேள்விகளுக்கு இங்கு விடையளிக்க முயன்றுள்ளோம்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - விளையாடிய போட்டிகள் 13, புள்ளிகள் -12, நெட் ரன்ரேட் +0.29
இப்போது பிளேஆஃப் ரேஸில் முன்னேற அதிக வாய்ப்புகளை பெற்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பற்றி பார்ப்போம்.
இதுவரை 13 போட்டிகளில் ஆடியுள்ள கொல்கத்தா அணி 6 வெற்றி 7 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இந்த இடத்தை அந்த அணி தக்கவைத்துக்கொள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டியில் வெற்றியை ருசிக்க வேண்டும். அப்படி வெற்றி பெறும் பட்சத்தில் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.
நெட் ரன்ரேட் அடிப்படையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மற்ற 3 அணிகள் (மும்பை, ராஜஸ்தான், மற்றும் பஞ்சாப்) கொல்கத்தா அணியை முந்தி செல்ல அவர்கள் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
ஒரு வேளை கொல்கத்தா அணி தோல்வியை தழுவும் பட்சத்தில், ராஜஸ்தான் மற்றும் மும்பை ஆகிய இரண்டு அணிகளுக்குமான மோதல் உறுதியாகிவிடும். மேலும் இந்த இரு அணிகளுமே இன்னும் 2 லீக் ஆட்டங்கள் உள்ளன.
மும்பை இந்தியன்ஸ் - விளையாடிய போட்டிகள் -12, புள்ளிகள் -10, நெட் ரன் ரேட் -0.45
நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு சீசனில் மிகவும் மோசமான பின்னடைவை சந்தித்த அணிகளுள் ஒன்றாக உள்ளது. இந்த அணிக்கு இன்னும் 2 லீக் ஆட்டங்கள் உள்ள நிலையில், அதன் ஒரு ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியையும், மற்றொரு ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தையும் எதிர்கொள்கிறது.
ராஜஸ்தானுடனான ஆட்டத்தில் அந்த அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரில் உயிர்ப்புடன் இருக்கலாம். மேலும், மோசமான ரன்-ரேட்டை கொண்டுள்ள அந்த அணி எதிர் வரும் 2 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெறுவதே அவர்களின் ஒரே வாய்ப்பாக உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் - விளையாடிய போட்டிகள்- 12, புள்ளிகள் - 10, நெட் ரன்ரேட் -0.33
சென்னை அணிக்கெதிரான ஆட்டத்தில் 190 ரன்கள் கொண்ட இமாலய இலக்கை எட்டிப்பிடித்துள்ள ராஜஸ்தான் அணியின் தலைவிதி அந்த அணியின் கையிலே உள்ளது. மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு எதிரான லீக் ஆட்டங்ககளில் அந்த அணி வெல்லும் பட்சத்தில் 14 புள்ளிகளை பெற்று பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும். மேலும், அந்த அணி ஒரு லீக் ஆட்டத்தில் தோல்வியை தழுவினால் கூட பிளேஆஃப் சுற்று கனவுக்கு ஆபத்து வந்து விடும்.
தவிர, பிளே ஆஃப் ரேஸில் உள்ள 4 அணிகளுமே 12 புள்ளிகளை பெறும் பட்சத்தில் நெட் ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் அணிக்கு வாய்ப்பு உள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் - விளையாடிய போட்டிகள் -13, புள்ளிகள் -10, நெட் ரன்ரேட்-0.24
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஏதாவது ஒரு அதியசம் நடந்தால் தான் அந்த அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்ற அளவுக்கு அந்த அணியின் நிலை உள்ளது. 10 புள்ளிகளுடன் பட்டியலில் 5வது இடத்தில் உள்ள இந்த அணி அதன் கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 70 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அதே வேளையில் இதே வித்தியாசத்தில் கொல்கத்தா அணி ராஜஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவ வேண்டும். அதோடு வேறு எந்த அணியும் 14 புள்ளிகளைப் பெறவில்லை என்றால் பஞ்சாப் கிங்ஸ்க்கு பிளே-ஆஃப் வாய்ப்பு உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - விளையாடிய போட்டிகள் - 12, புள்ளிகள் - 18, நெட் ரன்ரேட் +0.82
சிறந்த நெட் ரன்-ரேட்யை பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ள சென்னை அணி அதன் அடுத்த 2 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றியைப் பெற்றால் போதும். முதலிரண்டு இடத்தை தக்க வைத்துக்கொள்ளலாம். இதனால் அந்த அணி இறுதிப்போட்டிக்கான முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் தோல்வியை தழுவினாலும் அந்த அணிக்கு இன்னும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.
சென்னை அணியின் நெட் ரன்ரேட் நல்ல நிலையில் இருப்பதால் அந்த அணி தோல்வியை தழுவினாலும் முதலிரண்டு இடத்தில் நீடிக்க பெரிய அளவில் ஆபத்து வராது.
டெல்லி கேபிட்டல்ஸ் - விளையாடிய போட்டிகள் - 12, புள்ளிகள் - 18, நெட் ரன்ரேட் +0.55
பிளே-ஆஃப் சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுள்ள டெல்லி அணி எதிர்வரும் இரண்டு லீக் ஆட்டங்களில் (சென்னை மற்றும் பெங்களூரு) வென்றால் முதலிரண்டு இடத்தை பாதுகாப்பாக தக்க வைத்துக்கொள்ளும்.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - விளையாடிய போட்டிகள் -12, புள்ளிகள் -16, நெட் ரன்ரேட் -0.15
மூன்றாவது அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள பெங்களூரு அணி முதலிரண்டு இடத்திற்குள் வர ஐதராபாத் மற்றும் டெல்லி அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும். மேலும், நெட் ரன்ரேட்டில் பின் தங்கியுள்ள அந்த அணி 20 புள்ளிகளை பெற்றால் கூட பட்டியலில் 3வது இடத்தை தான் பெறும்.
சென்னை - டெல்லி அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் (திங்கள் கிழமை) ஏதாவது ஒரு அணி தோல்வியை தழுவும் பட்சத்தில் பெங்களூரு அணி முதலிரண்டு இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் - விளையாடிய போட்டிகள் -12, புள்ளிகள் -4, நெட் ரன்ரேட்- 0.47
நடப்பு சீசனில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ள ஐதராபாத் அணி, பெங்களூரு மற்றும் மும்பை அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் அணிகளிடையே முக்கிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.