IPL 2021 Tamil News: இந்தியாவில் கொரோனா தொற்றின் பரவல் மற்றும் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஐபிஎல் தொடர் அவசியம் தானா என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதோடு தொற்று அதிகரிப்பால் தொடரில் பங்கேற்றுள்ள சில வீரர்கள் பின்வாங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆடம் ஜாம்பா மற்றும் கேன் ரிச்சர்ட்சன் விலகல்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணியின் வீரர்கள் ஆடம் ஜாம்பா மற்றும் கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவுக்கு திரும்ப முடிவு செய்துள்ளதாக அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
"ஆடம் ஜாம்பா மற்றும் கேன் ரிச்சர்ட்சன் தனிப்பட்ட காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவுக்குத் திரும்புகிறார்கள். மற்றும் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாடமாட்டார்கள். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்வாகம் அவர்களின் முடிவை மதிக்கிறது, அவர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குகிறது" என்று பெங்களூரு அணி அதன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
ஆடம் ஜம்பா மற்றும் ரிச்சர்ட்சன் நாடு திரும்புவதாக தெரிவித்திருந்த நிலையில், ஒரு நாள் கழித்து மற்றொரு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரருமான ஆண்ட்ரூ டை தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்புவதாக தெரிவித்துள்ளார்.
"நான் என்னுடைய நாடு செல்வதை தடுப்பதற்குள், என்னுடைய வீட்டிற்கு செல்ல நினைத்தேன். பயோ-பபுள் நடவடிக்கையில் நீண்ட காலமாக தங்கியுள்ளேன். நான் என்னுடைய வீட்டிற்கு செல்ல வேண்டும் அவ்வளவுதான்" என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளரும், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரருமான டேவிட் ஹஸ்ஸி, பல ஆஸ்திரேலிய வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு திரும்பி வர முடியுமா என்று பதட்டமாக உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
சிட்னி மார்னிங் ஹெரால்டிடம் ஹஸ்ஸி கூறுகையில், "அவர்கள் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்குள் வர முடியுமா என்பது பற்றி எல்லோரும் ஒருவித பதட்டமாக இருக்கிறார்கள். இன்னும் சில ஆஸ்திரேலிய வீரர்கள் கொஞ்சம் பதட்டமாக இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
இந்த தொடரில் 1 போட்டியில் களமிறங்கிய ரிச்சர்ட்சன் 1 விக்கெட்டை வீழ்த்திருந்தார். ஆடம் ஜாம்பா ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)