IPL 2021 Tamil News: ஐபிஎல் தொடர் கிரிக்கெட்டில் நேற்று மாலை நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் தும்சம் செய்தது. இந்த ஆட்டத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய ஆல்ரவுண்டர் ஜடேஜா, ஹர்சல் படேல் வீசிய இறுதி ஓவரில் 5 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரியை பறக்க விட்டு 37 ரன்கள் சேர்த்தார். மேலும் அவரது அசாத்திய பேட்டிங்கால் 28 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். அதோடு பந்துவீச்சிலும் மிரட்டி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
ஜடேஜாவின் இந்த ருத்ர தாண்டவம் குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கூறுகையில், “ஜடேஜா ஆட்டத்தை தன் வசப்படுத்தி கொள்பவர். கடந்த சில ஆண்டுகளில், பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அவரிடம் கண்டோம். எனவே அவருக்கு பேட்டிங்கில் கூடுதல் நேரமும், பந்து வீச்சில் கூடுதல் ஓவர்களும் வழங்குவது மதிப்புக்குரியது என்று கருதினோம்.
மேலும் இடக்கை பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசுவது மிகவும் கடினமான ஒன்றாகும். அந்த வகையில் ஜடேஜாவின் ஆட்டம் வலுவான ரன்களை சேர்க்க எங்களுக்கு உதவியது" என்று கூறியுள்ளார்.
பெங்களூரு அணியை கதிகலங்க செய்து ஆட்ட நாயகன் விருது பெற்ற ஆல்ரவுண்டர் வீரர் ஜடேஜா கூறுகையில், "எனது உடற்பயிற்சி, திறன், எல்லாவற்றிலும் நான் கடுமையாக உழைத்து வருகிறேன். அதிர்ஷ்டவசமாக அது பலனளித்தது. ஆல்ரவுண்டராக இருப்பது கடினமான வேலை, நீங்கள் எல்லா துறைகளிலும் சிறப்பானவராக இருத்தல் வேண்டும்.
பயிற்சியின் போது, நான் 3 பிரிவுகளிலும் பயிற்சி செய்யவில்லை, ஒரு நாள் என்னுடைய திறனில் கவனம் செலுத்துகிறேன். ஒரு நாள் பயிற்சியிலும், ஒரு நாள் உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்தி வருகிறேன்" என்று கூறியுள்ளார்.
ஹர்ஷல் ஆஃப்-ஸ்டம்பிற்கு வெளியே பந்து வீசுவார் என்று கேப்டன் தோனி கூறியதாகவும், அந்த வாய்ப்பை தான் சரியாக பயன்படுத்திக் கொண்டதாகவும் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)