IPL 2021 Tamil News: ஐபிஎல் தொடரின் 14வது சீசன் நாளை வெள்ளிகிழமை (9ம் தேதி) முதல் துவங்க உள்ளது. ரசிகர்கள் இல்லாமல் மூடப்பட்ட மைதானங்களில் நடைபெறவுள்ள இந்த தொடரின் முதல் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இதுவரை 5முறை கோப்பையை வென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த தொடரிலும் கோப்பை வெல்லும் முனைப்பில் உள்ளது. அதேவேளையில் இந்த முறையாவது கோப்பை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மிகக்கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இவ்விரு அணிகளுள் எந்த அணி இறுதி போட்டிக்கு முன்னேறும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
நேருக்கு நேர்
இந்த இரு அணிகளின் முந்தைய பதிவுகளை பொறுத்தவரை, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை விட மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு படி முன்னே உள்ளது என்றே கூறலாம். இதுவரை இந்த இரு அணிகளும் நேருக்கு நேராக சந்தித்த 27 போட்டிகளில், மும்பை இந்தியன்ஸ் அணி 17 போட்டிகளையும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 9 போட்டிகளையும் வென்றுள்ளன. ட்ராவில் முடிந்த ஒரு போட்டியை, சூப்பர் ஓவரில் வென்றுள்ளது பெங்களூரு அணி.
வெற்றி வீதம்
மும்பை இந்தியன்ஸ் அணி, புனே வாரியர்ஸுக்கு எதிரான 6 போட்டிகளில் 5 போட்டிகளை வென்று, அதன் வெற்றி சதவீதத்தை 83.33 புள்ளிகளாக வைத்துள்ளது. மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் அந்த அணி மோதிய 27 போட்டிகளில் 21 வென்றுள்ளது. தொடர்ந்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக 17 வெற்றிகளை பதிவு செய்துள்ள மும்பை அணி, அந்த அணிக்கு எதிராக 64.81 புள்ளிகளை சேர்த்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு வரையிலான ஐபிஎல் தொடர்களில், இந்த இரு அணிகலும் மோதிய போட்டிகளில் மாறி மாறி வென்றுள்ளன. அதற்கு பிறகான போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. மேலும் 2016 முதல் 2019 வரையிலான ஐபிஎல் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் அணிகெதிராக ஒரு போட்டியை கூட பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெல்லவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று ஆகும்.
இந்தாண்டு நடக்கவுள்ள தொடரில் இந்த இரு அணிகளும் வலுவான புதிய வீரர்களை களமிறக்கவுள்ளன. மேலும் இந்த தொடரில் எந்த அணியும் அதன் சொந்த மைதானத்தில் விளையாட போவதில்லை. எனவே இந்த சீசனில் சுவாரஷ்யத்திற்கு பஞ்சமிருக்காது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.