IPL 2021 Tamil News: சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய நேற்றைய ஆட்டத்தில் 45 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இதில் அசத்தலாக பந்து வீசிய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை சாய்த்தும், 4 கேட்ச்களை பிடித்தும் ஆட்டத்திற்கு திருப்பு முனை ஏற்படுத்தி கொடுத்தார். ஜடேஜாவின் இந்த அசத்தலுக்கு இணைய பக்கங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ள நிலையில், ஜடேஜாவின் ஆல்-ரவுண்ட் திறன்கள் அவரை சிஎஸ்கேவில் தோனியின் வாரிசாக முன்னணியில் வைத்திருக்கும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வர்ணனையாளருமான மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி அடுத்த சீசனில் களமிறங்குவாரா? மேலும் அவரின் இடத்திற்கு யாருக்கு வாய்ப்பு அளிக்கப்படும்? போன்ற கேள்விகள் அந்த அணியின் நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதனிடம் எழுப்பப்பட்டன. அதற்கு கேப்டன் தோனி அடுத்த சீசனிலும் களமிறங்குவார் என்பது போல் பதில் தெரிவித்திருந்தார். இருப்பினும் இந்த கேள்வி ரசிகர்கள் மனதில் இன்னும் ஒலித்துக்கொண்டே தான் இருக்கிறது.
இந்த நிலையில், தோனியின் தலைமைக்கு பிறகு, ஜடேஜாவை சுற்றி அணியைக் அமைக்க வேண்டும் என முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். பிரபல கிரிக்கெட் இணைய பக்கமான கிரிக்பஸ்க்கு அவர் அளித்த நேர்காணலில், "தோனி இன்னும் 2-3 வருடங்கள் விளையாடுவார். அதற்குப் பிறகு அவர் பெரிய அளவில் விளையாட மாட்டார். எனவே அவரது இடத்திற்கு தகுந்த வீரரை இப்போதே தேர்வு செய்து உருவாக்க வேண்டும். என்னை பொறுத்த வரை ரவீந்திர ஜடேஜாவை உருவாக்க முயல்வேன். ஏனென்றால் அவர் பேட்டிங், பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் சிறப்பாக உள்ளார். மேலும் களத்தில் உறுதியான மனநிலை கொண்டவராகவும் உள்ளார். மேலும் எந்த பணி கொடுத்தாலும் அதை திறம்பட செய்யும் வீராகவும் உள்ளார்" என்று கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு முதல் சென்னை அணியில் விளையாடி வரும் இங்கிலாந்தின் சாம் குர்ரான் ஒரு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தோனி ஓய்வு பெற்ற பிறகு அவரைச் சுற்றி சென்னை அணியை உருவாக்குவது குறித்து சிஎஸ்கே சிந்திக்கக்கூடும் என்று பேச்சுக்கள் இருந்தன. ஆனால் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மிகவும் இளமையாகவும் அனுபவமற்றவராகவும் இருக்கிறார். பெரிய சவால்களை அவரால் எதிகொள்வதில் சந்தேகம் உள்ளது என்று வாகன் கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.