IPL 2021 Tamil News: ஐபிஎல் தொடரின் 22வது லீக் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் (டி.சி) மோதிக்கொண்டன. விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்த இந்த போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி திரில் வெற்றி பெற்றது. சிக்ஸர்களால் வான வேடிக்கை காட்டிய டி வில்லியயர்ஸ் 75 ரன்கள் குவித்தார். தொடர்ந்து 4 வெற்றிகளை பதிவு செய்து சென்னை அணியிடம் தோல்வியை தழுவிய பெங்களூரு அணிக்கு இது 4 வது வெற்றி ஆகும்.
இந்த போட்டியில் டெல்லி அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷா - தவான் ஜோடியில், 6 மட்டுமே சேர்த்த தவான் யுஸ்வேந்திர சாஹல் வீசிய பந்தில் கைல் ஜேமீசன் வசம் கொடுத்து வெளியேறினார். தொடர்ந்து களம் கண்ட ஸ்டீவ் ஸ்மித் முகமது சிராஜ் வீசிய பந்தில் கீப்பர் டிவில்லியர்ஸிடம் கேட்ச் கொடுத்து வந்த வேகத்தில் பெவிலியன் நோக்கி நடையை கட்டினார். சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடிய பிரித்வி ஷா 3 பவுண்டரிகளை ஓடவிட்டு 18 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தார்.
அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுக்க வேண்டும் என்று போராடிய பிரித்வி ஷா, ஹர்ஷல் படேல் வீசிய (7.2 ஓவரில்) பந்தை ஆஃப் சைடில் துரத்த முயன்று கீப்பர் டிவில்லியர்ஸ் வசம் கேட்ச் கொடுத்தார். பந்து வீசிய ஹர்ஷல் படேல் மற்றும் கேட்ச் பிடித்த டிவில்லியர்ஸ் அவுட் என்று கத்தி கொண்டுருக்கையில், அம்பயர் அவுட் கொடுக்காமல் அமைதியாக நின்றார். ஆனால் பந்து தனது பேட்டில் பட்டதை உணர்ந்த பிரித்வி ஷா டெல்லியின் 'டக் அவுட்' நோக்கி நடந்தார்.
தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் பிரித்வி ஷாவின் செயலை வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேலும் இதுதான் ஒரு நல்ல ஸ்போட்ஸ்மேனுக்கான அடையாளம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)