IPL 2021 Tamil News: இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 14 வது சீசன் இந்த மாதம் 9ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. இதில் பங்கேற்று லீக் சுற்றில் விளையாடி வரும் அணிகள் தங்களின் பலத்தை நிரூபித்து வருகின்றனர். அந்த வகையில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி இதுவரை நடந்த 4 போட்டிகளில் 3ல் தோல்வியை தழுவியும்,1ல் வெற்றியையும் பெற்றுள்ளது.
இந்த நிலையில், அந்த அணியின் முன்னணி இடக்கை பந்து வீச்சாளர் டி நடராஜன் கால்முட்டி காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் முதல் 2 போட்டிகளில் மட்டும் களம் கண்ட அவர், பின்னர் நடந்த போட்டிகளில் விளையாடவில்லை. மேலும் மீதமுள்ள போட்டிகளில் இருந்தும் விலகி இருப்பதாக ஐதராபாத் அணியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நடராஜன் உடற்தகுதி குறித்து பஞ்சாப் அணிக்கெதிரான போட்டிக்கு பின்னர் தெரிவித்த அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர், நடராஜனுக்கு ஏற்பட்ட காயம் குறித்து அறிய அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும். ஆனால், ஸ்கேன் பரிசோதனைக்காக வெளியே சென்றால், அணியின் பயோ-பபுளை விட்டு வெளியேற வேண்டியது இருக்கும். அவர் மீண்டும் அணிக்குள் வர வேண்டுமென்றால், 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் அவரின் உடற்தகுதி குறித்து எங்கள் பயிற்சியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இருப்பினும் அவர் வெளியில் சென்று ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய நடராஜன், இங்கிலாந்துக்கு எதிரான 5 டி 20 போட்டிகளில் 4 போட்டிகளை தவறவிட்டு ஒரு போட்டியில் களமிறங்கினார். கடந்த சீசனில் ‘யார்க்கர்’பந்து வீச்சில் கலக்கிய அவருக்குக்கு இந்த சீசன் மிகுந்த ஏமாற்றமாக அமைந்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)