IPL 2021 Tamil News: 2021 ஆண்டுக்கான ஐபிஎல் டி20 தொடர் கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதிக்கொண்டன. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய தொடக்க வீரர் ப்ரிதிவிஷா 39 பந்துகளில் 59 ரன்களை குவித்தார். மேலும் அந்த அணியின் முன்னணி வீரர்கள் தவான் (28) , ரிஷப் பண்ட் (37), ஸ்டீவன் ஸ்மித் (34) போன்றோர் சிறப்பான பங்களிப்பை தந்தனர்.
தொடர்ந்து160 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை சமன் செய்தது. நிதானத்துடன் ஆடி அஸ்திவாரமிட்ட கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 66 ரன்களை சேர்த்தார். பிறகு நடந்த சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய ஐதராபாத் 7 ரன்கள் எடுத்தது. 8 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லி அணியின் தவான் - பண்ட் ஜோடி தட்டு தடுமாறி இறுதி பந்தில் வெற்றி பெற வைத்தது. இந்த ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 27 ரன்கள் வழங்கி விக்கெட் ஏதும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், அஸ்வின் நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலின்போது குடும்பத்துடன் இருக்கவேண்டிய அவசியம் இருப்பதால் விலகியதாகவும், நிலமை மாறினால் அணிக்கு மீண்டும் திரும்புவேன் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
"நான் இந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில் இருந்து நாளை முதல் விலக உள்ளேன். கொரோனா பெருந்தொற்று எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வரும் இந்த கடினமான காலங்களில் நான் உடன் இருப்பது அவசியம். அனைத்தும் சரியான திசையில் சென்றால் மீண்டும் அணிக்கு திரும்பி விளையாடுவேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதில் ட்வீட் செய்துள்ள டெல்லி அணி நிர்வாகம் "இந்த கடினமான காலங்களில் எங்கள் முழு ஆதரவையும் உங்களுக்கு வழங்குகிறோம். அணியின் சார்பாக உங்கள் குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்கிறோம் என்று பதிவிட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)