AB de Villiers Tamil News: இந்திய மண்ணில் நடைபெற்று வந்த 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள உள்ளது. வரும் 19ஆம் தேதி முதல் துவங்க உள்ள இந்த போட்டிகளின் முதல் போட்டியே மிகப்பெரிய போட்டியாக அமைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு தொற்றியுள்ளது.

இந்த போட்டிகள் துவங்க இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. இதில், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு அடுத்தபடியாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. விராட் கோலி தலைமையிலான இந்த அணி நேற்று முதல் தனது இண்ட்ரா ஸ்குவாட் பயிற்சி ஆட்டத்தை தொடங்கியுள்ளது.

இந்த பயிற்சி ஆட்டத்தில் தேவ்தத் பட்டிக்கல் தலைமையில் ஒரு அணியும், ஹர்ஷல் பட்டேல் தலைமையில் ஒரு அணியும் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் வீரர்கள் தங்கள் அதிரடியால் மைதானத்தின் மூலை முடுக்கெல்லாம் பந்தை பறக்க விட்டனர். குறிப்பாக அந்த அணியின் சீனியர் வீரர் ஏ பி டிவில்லியர்ஸ் 360 டிகிரியில் தனது மட்டையை சுழற்றி பந்துகளை பறக்கவிட்டார். மேலும் சதம் அடித்து அசத்திய அவர் 46 பந்துகளில் 104 ரன்கள் (10 சிக்ஸர், 7 பவுண்டரி) சேர்த்தார்.

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த ஏ பி டிவில்லியர்ஸ் கடந்த சில மாதங்களாக எந்தவொரு கிரிக்கெட் தொடரிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். எனவே இந்த ஆட்டத்தின் துவக்கத்தில் 19 பந்துகளுக்கு 19 ரன்களையே அடித்திருந்தார். தொடர்ந்து நல்ல ஃபார்முக்கு வந்த அவர் அதிரடி காட்டி சதம் அடித்தார். இதனால் ரசிகர்கள் ‘வயசானாலும் ஸ்டைல் போகல’ எனக் கூறி வியப்படைந்துள்ளனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பாண்டு ஐ.பி.எல். தொடரில் புள்ளி பட்டியலில் 3ம் இடத்தில் இருக்கிறது. இந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக வலம் வரும் ஏ பி டிவில்லியர்ஸ் தற்போது சதமடித்து மிரட்டியுள்ள நிலையில், மீதமுள்ள போட்டிகளில் அந்த அணி வென்று பட்டியலில் முன்னேற முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கலாம். மேலும், அந்த பந்து வீச்சாளர்கள் யுவேந்திர சாஹல், ஹசரங்கா, கெயில் ஜேமிசன், முகமது சிராஜ் போன்றோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். எனவே, எதிரவரும் போட்டிகளில் அந்த அணி நிச்சயம் அதிரடி காட்டும் என்பதில் சந்தேகமில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil