IPL 2021 Updates: டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். எனவே பேட்டிங் செய்ய சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட்டும், பாப் டு பிளிஸ்சிஸ்சும் களம் கண்டனர். அணிக்கு நல்ல துவக்கம் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கையில் துவக்க வீரர் ருதுராஜ் முதல் ஓவரிலேயே கேட்ச் கொடுத்து (4 ரன்) வெளியேறினார்.
தொடர்ந்து களம் கண்ட ஆல்-ரவுண்டர் மொயீன் அலி மறுமுனையில் இருந்த பிளிஸ்சிஸ்சுடன் ஜோடி சேர்ந்தார். அணிக்கு வலுவான அடித்தளமிட்ட இந்த ஜோடியில் மொயீன் அலி சிக்கிய பந்துகளையெல்லாம் சிதறடித்தார். அதோடு டிரென்ட் பவுல்ட், பும்ராவின் போன்றோரின் ஓவர்களில் சர்வ சாதாரணமாக சிக்சர்களை பறக்க விட்டு வான வேடிக்கை காட்டினார். மேலும் உடன் இருந்த டு பிளிஸ்சிஸ்சும் பும்ராவின் ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர், ஒரு பவுண்டரி விரட்டியடித்தார்.
அணியின் ஸ்கோர் 112 ஆக இருந்த போது பும்ரா வீசிய ‘ஷாட்பிட்ச்’ பந்தில் விக்கெட் கீப்பர் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் மொயீன் அலி (58 ரன், 36 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்). தொடர்ந்து தனது 4-வது அரைசதத்தை பதிவு செய்த பாப் டு பிளிஸ்சிஸ் (50 ரன்கள், 28 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), பொல்லார்ட் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பிறகு வந்த சுரேஷ் ரெய்னாவும் சிக்ஸர் அடிக்க முயன்று தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
தொடர்ந்து 2 விக்கெட்டுகளை பறிகொடுத்த சென்னை அணி, களத்தில் இருந்த ரவீந்திர ஜடேஜா, அம்பத்தி ராயுடு ஜோடியால் நிதான ஆட்டத்தை தொடர்ந்தது. 2 ஓவர்கள் மட்டுமே நீடித்த இந்த நிதான ஆட்டத்தை தொடர்ந்த இந்த ஜோடி, அடுத்தடுத்த ஓவர்களில் அதிரடி காட்ட துவங்கியது. அதிலும் குறிப்பாக அம்பத்தி ராயுடு டெல்லி மைதானத்தில் வான வேடிக்கை காட்டினார். மேலும் 27 பந்துகளில் 7 சிக்ஸர், , 4 பவுண்டரிகளை பறக்க விட்டு 72 ரன்கள் குவித்தார். உடன் இருந்த ஜடேஜா 22 ரன்கள் சேர்த்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்த சென்னை அணி 218 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து 219 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய மும்பை அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்தது. அந்த அணியின் துவக்க வீரர்களாக களம் கண்ட கேப்டன் ரோகித் சர்மாவும் (35 ரன்), குயின்டான் டி காக்கும் (38 ரன்) நேர்த்தியான தொடக்கம் கொடுத்தனர். அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் (3 ரன்) பெரிதும் சோபிக்கவில்லை. பிறகு வந்த ஆல்-ரவுண்டர் கீரன் பொல்லார்ட் அணிக்கு வலுவான ரன்களை சேர்க்க விஸ்வரும் எடுத்தார். ஜடேஜா, மற்றும் நிகிடி ஓவர்களில் சிக்ஸர்களை பறக்க விட்ட பொல்லார்ட் 17 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். அவருடன் இருந்த குருணல் பாண்ட்யாவும் தனது பங்கிற்கு 2 சிக்ஸர்களை சிதற விட்டு 32 ரன்கள் சேர்த்தார். இவரின் விக்கெட்டுக்கு பிறகு வந்த ஹர்திக் பாண்ட்யா 2 சிக்ஸர்களை விளாசி ஆட்டமிழந்தார்.
பரபரப்பு தொற்றிக் கொண்ட இந்த ஆட்டத்தின் இறுதி ஓவரில் மும்பையின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய நிகிடிக்கு அழுத்தம் அதிகரிக்கவே, 5 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய பொல்லார்ட் கடைசி பந்தில் வெற்றிக்கு தேவையான 2 ரன்களை ஓடி எடுத்து வெற்றியை உறுதி செய்தார்.
திரில் வெற்றியை ருசித்த மும்பை அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து இலக்கை அடைந்தது. சர வெடியாய் வெடித்த பொல்லார்ட் 8 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளை விளாசி 87 ரன்களுடன் களத்தில் இருந்தார். தொடர்ந்து 5 ஆட்டங்களில் வெற்றியை சுவைத்த சென்னை அணி இந்த முறை தோல்வியை தழுவியது. மும்பை அணி தனது 4வது வெற்றியை பதிவு செய்தது.
WHAT. A. WIN for the @mipaltan 🔥🔥
— IndianPremierLeague (@IPL) May 1, 2021
Some serious hitting from @KieronPollard55 ( 87* off 34) as #MumbaiIndians win by 4 wickets.
Scorecard – https://t.co/NQjEDM2zGX #VIVOIPL pic.twitter.com/UAb6SYCMQz
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)